எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 24 ஜூலை, 2011

நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை : டாக்டர்.க.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

 


திருநெல்வேலி : நில அபகரிப்பில் ஈடுபட்ட பன்னாட்டு கம்பெனிகள், வெளிமாநிலத்தவர்கள் என யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். என நெல்லையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி கூறினார்.
இதுகுறித்து கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
                                                   
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்த மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 23ம் தேதி மலர் அஞ்சலியும், பேரணியும் நடத்தப்படுகிறது. புதிய தமிழகம் கட்சியின் மாநில உயர்மட்டக் குழு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. புதிய தமிழகம் கட்சியை கிராமம், நகரங்களில் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் ஏழை மக்களின் நிலங்கள் சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பில் ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நில அபகரிப்பில் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள், பன்னாட்டு கம்பெனிகளும் ஈடுபட்டுள்ளன. அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மலைப்பட்டி, இளவேளங்கால் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை விவசாய மக்களின் நிலங்கள் மும்பையை சேர்ந்த ஒரு தனியார் கம்பெனியால் மோசடி செய்து ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடியை சேர்ந்த அரசியல் பிரமுகர் துணை போயுள்ளார்.
மேலமருதூர், புதூர் பாண்டியாபுரம், சிலாத்திகுளம் பகுதிகளில் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஏழை மக்களின் நிலங்களை போலியாக பதிவு செய்துள்ளன. 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில்களின் நிலங்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. ஓடைகள், குளங்கள், மயானங்கள், திருச்செந்தூர் மங்கம்மாள் ரோடு போன்ற இடங்கள், அரசு சொத்துக்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு பாரபட்சம் இல்லாமல் ஆக்ரமிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் மீட்டு பாதுகாக்கவேண்டும். ஏழை மக்களின் நிலங்களை மீட்டு அவர்களுக்கே மீண்டும் வழங்கவேண்டும். காற்றாலை நிறுவனங்களுக்காகவும் ஏழை மக்களின் நிலங்கள் மோசடியாக விற்கப்பட்டுள்ளன. இந்த மோசடிகள் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிக அளவு நடந்துள்ளது. நில மோசடியில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தாமிரபரணி, வைகை, பாலாறு ஆற்றுப்படுகைகளில் அளவுக்கு அதிகமாக விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் 12க்கும் மேற்பட்ட ஒன்றியங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்துள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு கவனம் செலுத்தவேண்டும் தொழிற்சாலைகள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இதற்கு தடை விதிக்கவேண்டும்.
ஆறுகளில் கழிவுகள் கொட்டப்படுவது, சாக்கடை கலப்பதையும் தடுக்கவேண்டும். நிலத்தடி நீர் பாதுகாப்பு, நதிநீர் பாதுகாப்பு சம்பந்தமாக ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த முடிவு செய்துள்ளேன். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் உயிர்பிக்கவேண்டும். தமிழகத்தில் ஏரிகள், குளங்களில், ஆக்ரமிப்புகளை அகற்றவேண்டும். குளங்களில் மழைநீர் சேமிக்கவேண்டும்.
சமச்சீர் கல்வி தேவை தான். சமமான வாய்ப்புள்ள கல்வியாக தற்போதைய சமச்சீர் கல்வி இல்லை. சமச்சீர் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. அரசு பள்ளிகளில் தரம் உயர்த்தப்படவேண்டும். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக