எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 27 நவம்பர், 2012

தண்ணீரையும் மண்ணையும் காக்க டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்



நிலத்தடி நீர் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி போராட்டம் தொழிற்சாலைகளுக்கு சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் சார்பில்  இன்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சித் தலைவரும், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ.வுமான டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. ராமசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் ஓட்டப்பிடாரம் மாசானசாமி, புதியம்புத்தூர் பொன்ராஜ், குலசேகரநல்லூர் வேலாயுதசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
புதியதாக தொழிற்சாலைகள் அமைக்கும் போது விரிவாக்கம் செய்யும் போதும் கடல் நீரைக் குடிநீராக மாற்றியும், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமும் தண்ணீர் பெற்றுக் கொள்வொம் என்று தொழிற்சாலைக்கான அனுமதியை பெற்றுவிடுகின்றனர். பின்னர் நிலத்தடி நீரை எடுத்து தேவைகளை சமாளித்து வருகின்றனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிளிருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படக் கூடிய நிலத்தடி நீரை உறிஞ்சி ஸ்டெர்லைட், அனல் மின் நிலையங்கள், சீ புட் கம்பெனி உள்ளிட்ட பெரிய தொழில் நிறுவனங்களுக்கு வணிக நோக்கத்தோடு விற்பனை செய்து வருவதை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிலத்தடி நீர் கொள்ளையைத் தடுத்து நிறுத்த கோரி இன்று ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர்.கிருஷ்ணசாமி, "தமிழக முதல்வரிடம் நேரிடையாகவும் இந்த நிலத்தடி நீர் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரிக்க வைத்தோம். சட்டசபையிலும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்தோம். நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து நேரிடையாக வாதாடினேன். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.  
தமிழக அரசு நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கனிம வளத்தைப் பாதுகாக்க இயக்கம் ஆரம்பித்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் பணியை புதிய தமிழகம் செய்யும்என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் பங்கேற்றனர். அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவர்களும், கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர் சேர்க்கையை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடக்க விழா, புதூர்பாண்டியாபுரம் கிராமத்தில் நடந்தது. விழாவுக்கு ஓட்டபிடாரம் தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.  புதூர்பாண்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
உதவித்தொகை
ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதியில் 2.50 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் உடைய குறு விவசாயிகள் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்களாக பெயர் சேர்த்துக் கொள்ள வேண்டும். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக சேரலாம்.
உறுப்பினர்களின் குழந்தைகள் திருமணத்துக்கு ஆண் என்றால் ரூ.8 ஆயிரமும், பெண் என்றால் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். உறுப்பினர்கள் குழந்தைகளின் படிப்புக்கு உதவி தொகையாக ரூ.1,250 முதல் ரூ.6,750 வரை கொடுக்கப்படுகிறது. உறுப்பினருக்கு விபத்து ஏற்பட்டால் ரூ.1 லட்சமும், இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
இதனால் குறு விவசாயிகள் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்களாக சேர வேண்டும்.
இவ்வாறு கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
ஆய்வு
பின்பு புதூர்பாண்டியாபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அரசு அறிவித்துள்ள உணவு வகைகள் சரியாக வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.
புதூர்பாண்டியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ், புதிய தமிழகம் கட்சி மாவட்ட பொறுப்பாளர் பட்டவராயன், மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பூவானி லட்சுமண பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி, ஓட்டபிடாரம் தொகுதி பொறுப்பாளர் செல்லத்துரை, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 20 நவம்பர், 2012

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தலித்துகளுக்கு வழங்கப்படும் 18 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து அருந்ததியர்களுக்கு 2009-ம் ஆண்டு முதல் 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ராஜசேகர் சுப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் என். வரதராஜன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி. சம்பத் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம், தீர்ப்பு வரும்வரை உள் ஒதுக்கீடு தொடரும் என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி. சம்பத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் உள் ஒதுக்கீட்டுக்கு தடை கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பஞ்சாப் மாநில உள் ஒதுக்கீட்டு வழக்கில் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
எனவே, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஜி. ராமகிருஷ்ணன், பி. சம்பத் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கில் மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத், வழக்குரைஞர்கள் எம். கிறிஸ்டோபர், பெனோ பென்சிகர் ஆகியோர் ஆஜராக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காடுவெட்டி குரு மீது உரிமை மீறல் விவாதம்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்



தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில், காதல் திருமணம் காரணமாக எழுந்த கலவரம் மற்றும் வன்முறை தீவைப்புச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை இன்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
"பாமகவைச் சேர்ந்தவரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு போன்றோர் இது போன்ற சம்பவங்களுக்குக் காரணம். சாதீய ரீதியான மோதல்களைத் தூண்டும் வகையில் சிலர் பேசி வருகின்றனர்.
அண்மையில் மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டுக் கூட்டத்தில் பேசிய காடுவெட்டி குரு, வன்னியர் இனப் பெண்களை வேறு சாதியினர் திருமணம் செய்துகொண்டால் அவர்களை வெட்ட வேண்டும் கொல்ல வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
இது அவர் எம்.எல்.ஏ.வாகப் பொறுப்பேற்றுக் கொண்ட செயலுக்கு உகந்தது அல்ல. அவர் எல்லோருக்கும் பொதுவாக சட்ட மன்ற உறுப்பினர் ஆனவர். ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பதவி ஏற்கும் போது மேற்கொள்ளும் பிரமாணத்தை அவர் மீறியிருக்கிறார். இதற்காக அவர் மீது சட்டமன்றத் தலைவரிடம் உரிமை மீறல் மனு கொடுத்தேன்.
ஆனால், சட்டமன்றக் கூட்டம் விரைந்து முடிந்துவிட்டதால், அப்போது விவாதிக்க இயலாமல் போய்விட்டது. அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த உரிமை மீறல் குறித்து விவாதிக்கப்படும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார் டாக்டர் கிருஷ்ணசாமி.

வெள்ளி, 16 நவம்பர், 2012

பரமக்குடி துப்பாக்கிச்சூடு துரதிருஷ்டவசமானது



டாக்டர் கிருஷ்ணசாமி - ஒட்டப்பிடாரம் தொகுதி (புதிய தமிழகம்)

ஒட்டப்பிடாரம் தொகுதியின் தனித்தன்மை என்ன?
வரலாற்றுரீதியாக இந்திய சுதந்தரத்துக்காகத் தன்னுயிரை நீத்த எண்ணற்ற தியாகிகள் பிறந்து வாழ்ந்து போராடிய மண்ணாகும். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. முதல் வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது தளபதியாக செயல்பட்ட சுந்தரலிங்கம் வரை பல்வேறு மாவீரர்களைக் கொண்ட ஊர் இது. பாரதியாரும் இப்பகுதியை சேர்ந்தவர்தான்.
தென் மாவட்டங்களில் அதிகம் தொழில்கள் வராமல் தொடர்ந்து மக்கள் வேலைவாய்ப்புக்காகத் தலைநகரத்துக்கு இடம்பெயரும் நிலை தொடர்வது ஏன்?
தலைநகர் சென்னையிலிருந்து மிகத் தொலைவில் இப்பகுதிகள் உள்ளன. போக்குவரத்து வசதிகள் இல்லை. வறட்சிப் பகுதியாகவும் உள்ளது. ஆனால் ஆட்சியாளர்கள் சென்னை யைச் சுற்றியிருக்கும் இடங்களிலேயே தொழில்களை ஊக்குவிக்கின்றனர்.
சட்டமன்ற உறுப்பினருக்கான நிதியை பைசா மிச்சமில்லாமல் தொகுதி மக்களுக்குச் செலவழிப்பவர் நீங்கள். இந்தமுறை உங்கள் நிதியை எப்படிச் செலவழிக்க திட்டமிட்டுள்ளீர்கள்?
சென்றமுறை சட்டமன்ற உறுப்பின ராக இருந்தபோது இணைப்புச் சாலைகள், சமூகக்கூடங்கள், குடிநீர் குழாய்கள், அங்கன்வாடிகள் அமைப்பதற்கு எனக்குத் தரப்பட்ட நிதியைப் பயன்படுத்தினேன். ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கை வசதி இல்லாத நிலை இருந்தது. அத்துடன் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வசதியும் சேர்த்து இருக்கை வசதிகளை உருவாக்க 80 லட்சம் ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளது. இதுதான் முக்கியமான வேலை என்று சொல்வேன்.
கொங்கு மண்டலத்தில் பிறந்த நீங்கள் தென்மாவட்டங்களில் செல்வாக்கான தலைவராய் எப்படி மாறினீர்கள்?
போராட்டத்துக்கான தளம் வலுவாக, களம் தயாராக இருந்தது. அதுதான் காரணம்.
பரமக்குடி துப்பாக்கிசூடு அதிமுக அரசின் நிர்வாகத்திற்கு கரும்புள்ளியாகவே உள்ளது. அதுகுறித்துக் கூறுங்கள்?
அந்தச் துப்பாக்கிசூடு அவசியமற்றதென்றும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் நஷ்ட ஈடும் கோரினேன். அதற்கு அரசும் இசைந்தது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவுக் கூட்டத்திற்கு கூடிய மக்கள் அவ்வளவு பேரையும் போராட்டக்காரர்களாக அரசு பார்த்ததுதான் துரதிருஷ்டமானது.
தென் மாவட்டங்களில் தலித்துகள் மற்றும் ஆதிக்க சாதியினரிடையே குறிப்பிடத்தக்க அளவு சமத்துவத்தை உருவாக்கியவர் நீங்கள். ஆனால் உங்கள் கட்சி பெரிய அளவில் வளர முடியாமல் போனதற்குக் காரணம்..?
திராவிட கட்சிகள்தான் காரணம். அவர்கள் உருவாகும்போது பிராமண எதிர்ப்பு இயக்கமாக உருவானார்கள். வளர்ந்த பிறகு தலித்துகளுக்கு விரோதமான மனநிலையை வளர்த் துக் கொண்டுள்ளனர். தலித் மக் களின் இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து ஒருங்கிணையும் காலம் வரும்

புதன், 7 நவம்பர், 2012

எம்.எல்.ஏ.,க்களுக்கு வாகனம் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

சென்னை : ""தொகுதிகளில், மக்கள் நல திட்டப் பணிகளை சென்று பார்ப்பதற்கு வசதியாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு, வாகனம் வழங்க வேண்டும்,'' என, புதிய தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

சட்டசபையில், அவர் பேசியதாவது: மதுரையில், கிரானைட் முறைகேடு செய்த ஜாம்பவானை, தமிழக அரசு கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. தமிழக அரசு, பல்வேறு இலவச திட்டங்களை அமல்படுத்துகிறது. இத்திட்ட விழாக்களில், எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மக்கள் நல திட்டப் பணிகளை, தொகுதி முழுவதும் சென்று பார்வையிடுவதற்கு வசதியாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு, தமிழக அரசு வாகனம் வழங்க வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில், எம்.எல்.ஏ.,க்களுக்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டும். இப்படி செய்தால், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றதும், உடனுக்குடன் கலெக்டரை சந்தித்து, குறைகளைத் தீர்ப்பதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.

அரசு விழாவில் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி புறக்கணிப்பு: கொந்தளித்த புதிய தமிழகம் தொண்டர்கள்

ஒட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் அத்தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி அழைக்கப்படாததைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் கொந்தளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட புதியம் புத்தூர் தொகுதியில் தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார். ஆனால் ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.வான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அழைக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த புதிய தமிழகம் கட்சியினர் அமைச்சர் செல்லப்பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழா நிகழ்ச்சியிலிருந்தும் புதிய தமிழகம் கட்சியினர் வெளியேற அமைச்சர் செல்லப் பாண்டியனும் சிறிது நேரத்திலேயே விழாவை முடித்துவிட்டு கிளம்பினார்.

தலைமை ஆசிரியர் கொலை வழக்கில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ விடுதலையை எதிர்த்த அரசின் மனு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

தலைமை ஆசிரியர் கொலை வழக்கில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ விடுதலையை எதிர்த்த அரசின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் கடந்த 15.9.1997 அன்று கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பழிவாங்கும் வகையில், ராம்குமார் கொலை செய்யப்பட்ட 4–வது நாளில்(19.9.1997) இன்னொரு சமூகத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை நடப்பதற்கு முன்பு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி(தற்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.யாக இருந்து வருகிறார்), போலீசாரால் கைது செய்யப்பட்ட போது அந்த கட்சியின் சார்பில் ‘பந்த்‘ அறிவிக்கப்பட்டதாம். ‘பந்த்‘ அன்று பள்ளியை மூடும்படி கூறியும், தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் பள்ளியை மூடவில்லையாம். இந்த விரோதம் காரணமாகவும் அந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

விடுதலை

இந்த கொலை தொடர்பாக புளியம்பட்டி போலீசார், டாக்டர்.கிருஷ்ணசாமி, சுரேஷ், ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தின் போது ரமேஷ் மைனர் என்பதால் அந்த வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. கிருஷ்ணசாமி உள்ளிட்ட 2 பேர் மீதான வழக்கு தூத்துக்குடி செசன்சு கோர்ட்டில் நடந்தது.வழக்கை விசாரித்த கோர்ட்டு, கிருஷ்ணசாமி, சுரேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டை போலீசார் நிரூபிக்கவில்லை என்று கூறி அவர்கள் 2 பேரையும் விடுதலை செய்து 17.1.2005 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில், மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனு நீதிபதிகள் கே.சுகுணா, ஆர்.மாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கிருஷ்ணசாமி உள்ளிட்ட 2 பேர் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம், வக்கீல் ஜி.தாழைமுத்தரசு ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

அப்பீல் மனு தள்ளுபடி

மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–இந்த வழக்கை பொறுத்தமட்டில், டாக்டர் கிருஷ்ணசாமி கொலைக்கு சதி திட்டம் தீட்டினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதுபோன்று சதி திட்டம் தீட்டியது தொடர்பாக எந்தவித ஆதாரத்தையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை. கிருஷ்ணசாமிக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளவர்கள் முக்கிய சாட்சிகள் ஆவர்.ஆனால் அவர்களுக்கும், கிருஷ்ணசாமிக்கும் விரோதம் இருப்பது தெரிகிறது. அந்த அடிப்படையில் தான் அவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். எனவே கிருஷ்ணசாமி உள்ளிட்ட 2 பேரையும் கீழ்கோர்ட்டு விடுதலை செய்தது சரியானது தான்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.