எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நிலத்தடி நீர் உறிஞ்சுவதை உடனடியாக தடுக்காவிடில்போராட்டம்; எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி அறிவிப்பு

திருநெல்வேலி, நிலத்தடி நீர் உறிஞ்சுவதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றியங்களிலும் நிலத்தடி நீர் அபாயகரமான கட்டத்தை தாண்டி கீழே சென்றுவிட்டது. மாவட்ட மக்கள் பெரும்பாலும் குடிநீர், வீட்டு உபயோகம், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு நிலத்தடி நீரை நம்பியே உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் ஆழ்துளை கிணறுகளில் நீரை உறிஞ்சி கடத்தி செல்வதால் தினமும் குடிநீர் மற்றும் விவசாய கிணறுகள் வற்றிவருகின்றன. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட வேளையில் தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்தும் குறைந்துவிட்டது. இச்சூழலில் தூத்துக்குடி மாவட்டமே மிகப்பெரிய அளவில் குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. நிலத்தடி நீர் கடத்தி செல்லப்படுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பலமுறை மாவட்ட அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் அதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் எடுத்துச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்துள்ளனர். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிலத்தடி நீர் அபகரிப்பை தடுத்திட தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முற்றாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் மக்களை திரட்டி எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும். போராட்டத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.க.கிருஷ்ணசாமி



ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி விவசாயிகளுக்கு புதுக்கோட்டையில் விவசாய வளர்ச்சி கருத்தரங்கு நடைபெறுகின்றது.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.க.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் யூனியன் வேளாண் உதவி இயக்குனர் மோகன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராஜன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கனகராஜ், கருங்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அல்பிரட், விவசாய பொருட்கள் விற்பனை உதவி இயக்குனர் ராஜா, வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் சங்கர்ராஜ், இளநிலை பொறியாளர் சிதம்பரம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் அலாய்சியஸ் மேரி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ராமனுஜம், கள மேலாளர் அமிர்தலிங்கம், , கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனரக வல்லுநர் டாக்டர்.அசோகன் உள்ளிட்ட விவசாயத் துறை அதிகாரிகளும், பிள்ளைமுத்து, அயிரவன்பட்டி முருகேசன், நிக்கோலஸ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாய மேம்பாடு குறித்து பேசினார்கள்.

கருத்தரங்கில் தலைமையேற்றுப் பேசிய டாக்டர்.கிருஷ்ணசாமி, விவசாயதஹி விட உலகில் உன்னதமான தொழில் ஒன்றும் கிடையாது. இன்று மெல்ல, மெல்ல நசிந்து போய்க் கொண்டு இருக்கின்றது விவசாயம். உழுபவருக்கு பின்தான் மற்றவர்கள் எல்லாம் செல்வார்கள் என இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார். பல்வேறு காரணத்தினால் இன்று நிலைமை மாறிவிட்டது. ஆயிரம் முதல் ஐயாயிரம் ஏக்கர் வரை நில மோசடி நடந்துள்ளது. விவசாயம் சாராத, உபயோகமில்லாத தொழிற்சாலைகள்தான் இங்கு அமைந்துள்ளது. காற்றை மாசுபடுத்தி, நிலத்தடி நீரை மாசுபடுத்தி, மண்ணை மாசுபடுத்தி, மூச்சை முடமாக்கும், மனிதர்களே வாழ முடியாத அளவில்தான் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. காரணம் விவசாயத்திற்கு முன்னிரிமை கொடுக்காமல் முக்கியத்துவபடுத்தாமல் விட்டு விட்டதுதான். இல்லையென்றால் உயிரைவிட அதிகம் நேசித்த மண்ணை மக்கள் இழந்திருக்க மாட்டார்கள். 1996ல் நான் வெற்றி பெற்றபோது ஸ்டெர்லைட் தொழிற்சாலை வரக்கூடாது என மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தினோம். பின்னர் பத்தாண்டுகளில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. இப்போது மீண்டும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்துள்ளீர்கள். ஒரு மாத காலத்தில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்துள்ளேன். தூத்துக்குடி திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் அனைத்து கிராமத்திலும் நின்று செல்கின்றது. அறுபதுக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தொழிற்சாலைகளுக்கும், பல கிலோ மீட்டர் தூரத்தில் சென்று நெடுஞ்சாலை பணிகளுக்கும் பயன்படுத்தினார்கள். இங்கே குடிநீர் ஆறு ரூபாய் விற்றது. இப்போது புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், புதுக்கோட்டை பகுதிகளில் விவசாய நிலத்தில் இருந்து தண்ணீர் வியாபாரம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்து தினங்களுக்குள் முற்றிலும் அவை நிறுத்தப்பட்டு விவசாயிகளின் நலன் காக்கப்படும். நள்ளிரவில், அதிகாலையில் திருட்டுத் தனமாக எடுத்து செல்வது தடுக்கப்படும். இல்லையென்றால் கிணறுகள் முழுவதும் வற்றி விடும். விவசாயம் பாழ்பட்டு விடும். விவசாயம் வளர, நிலத்தடி நீர் காக்கப்பட விவசாயிகள் விழிப்புணர்வோடு கண்காணிக்க வேண்டும்.
ஒரு சொட்டு நீர் கூட குடிக்க இல்லாமல், விவசாயத்திற்கு இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு அனுமதிக்க கூடாது. அதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் நேரில் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சில்லாநத்தம் கிராம மக்கள் மோசடியாக நிலம் பட்டா போடப்பட்டதாக புகார் தெரிவித்தனர். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இனி ஒரு சென்ட் நிலம் கூட போலி பட்டா போட ஓட்டப்பிடாரம் தொகுதியில் அனுமதிக்க கூடாது. சட்டசபையில் பதினைந்து நிமிடம் ஒதுக்கினார்கள் அதில் கன்னடியன் கால்வாய் குறித்து பேசினேன். ஒரு பகுதி மக்களின் கண்ணீரை எடுத்து இன்னொரு பகுதி மக்களுக்கு பன்னீரை தெளிப்பதா என்று கூறினேன். கன்னடியன் கால்வாய் உயரத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதிகாரிகள் முழு மனதோடு, நல்லெண்ணத்தோடு உங்களுக்கு உதவ வந்துள்ளார்கள் எனவே விவசாயத்திற்கான உரம் சரியாக வந்து சேரும். உர மூட்டைகள் வேறு எங்கும் மொத்தமாக செல்லாது. கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இன்னும் ஒரு வருடத்திற்குள் பத்தாயிரம் ஏக்கர் அதிகமாக விவசாயம் செய்ய வேண்டும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயம் இரு மடங்காக உயர வேண்டும். சொட்டு நீர் பாசனம் மானியம் பயன்படுத்த வேண்டும்.
குலையன்கரிசல், கூட்டாம்புளி, அத்திமரப்பட்டி பகுதியில் வாழை மட்டும் போடாமல் மஞ்சள், கரும்பு, நெல் என மாற்றுப் பயிர்கள் பயிரிட வேண்டும். ஒருங்கிணைந்த விவசாயம் செய்வதில் ஈடுபட வேண்டும். தண்ணீர் வறட்சியான பகுதியான கோவை, நாமக்கல், ராசிபுரம் பகுதகளில் விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். ஒரு வீட்டில் ஐம்பது நாட்டுக் கோழி வளர்த்தால் முட்டை ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். பெண்கள் வீட்டில் இருந்து இதை செய்யலாம். ஐந்து ஏக்கரில் கோழி பண்ணை வைக்கலாம். ஓட்டப்பிடாரம் பூமி நல்ல வளமான பூமியாக மாற்ற என்றும் உறுதுணையாக இருப்பேன். வரும் புதன்கிழமைக்கு பிறகு மண் பரிசோதனை செய்கின்றார்கள். நாளை பொதுப்பணித்துறை, யூனியன் குளங்கள் சுற்றிப் பார்க்க உள்ளேன்" என்று பேசினார். தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மழைப் பயிர்கள் துறை மத்திய அரசின் உதவியுடன் கூடிய நுண்ணிர்ப் பாசன திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை வேளாண்மை விற்பனை மையத்தின் சார்பில் மானிய விலையில் உளுந்து விதைகள் வழங்கப்பட்டது.

அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீட்டுக்கான சட்டம் எதிர்த்து புதிய தமிழகம் கட்சி ஐகோர்ட்டில் மனு


சென்னை : அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனு: கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, 19 சதவீத இடஒதுக்கீடு வகை செய்வதற்கான சட்டம் உள்ளது. இடஒதுக்கீட்டு விதிகளை அமல்படுத்துவதில் பல குறைபாடுகள் உள்ளன. அருந்ததியினர் சமூகத்தில் உள்ள ஏழு பிரிவுகளுக்கு, முதல் இடம் ஒதுக்கப்படுவதன் மூலம், ஆதிதிராவிட சமூகத்தில் உள்ள, 69 பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இச்சட்டத்தால், ஆதிதிராவிட பிரிவுகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. எனவே, அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டம் செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

கல்வி உதவித் தொகை திட்டம்: புதிய தமிழகம் கட்சி கோரிக்கை



சென்னை, ஆக. 5: உயர்கல்வி பெற விரும்பும் ஏழை மாணவ, மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ள உதவித் தொகை திட்டத்தை கல்லூரி நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: சமூக நீதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவ, மாணவர்களுக்கு அரசு உதவிபெறும் தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அக் கல்லூரிகளில் நிர்வாகம் நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்த முடியாததால் ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.
இப் பிரச்னை குறித்து நான் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். எனவே, அந்த கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவித்து இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 115 கோடியை முதல்வர் ஒதுக்கினார்.
மேலும், 1985-ம் ஆண்டு அரசு ஆணையின்படி, பட்டியலின மாணவ, மாணவர்களிடமிருந்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது. அதையும் கல்லூரி நிர்வாகங்கள் செயல்படுத்துவதில்லை.
இந் நிலையில், முதல்வர் அறிவித்துள்ள திட்டத்தை எந்த கல்வி நிறுவனமும் அமல்படுத்துவதாகத் தெரியவில்லை.
எனவே, கல்லூரி நிர்வாகங்கள் அந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பட்டியலின மக்களிடம் கட்டணம் வசூலிப்பதையும் கைவிட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்