எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 17 ஜனவரி, 2013

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் பொங்கல் பொருட்கள் வினியோகம் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ஓட்டப்பிடாரம் தாலுகாவில் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு திட்டத்தை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு
தமிழக அரசு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.100 பணம் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க உத்திரவிடப்பட்டு உள்ளது.  ஓட்டப்பிடாரம் தாலுகாவில் 84 ரேசன் கடைகளில் 33 ஆயிரத்து 906 ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு திட்டம் வழங்கும் விழா பாஞ்சாலன்குறிச்சி ரேசன் கடையில் நடந்தது. விழாவுக்கு பாஞ்சாலன்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் லதா தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் தாசில்தார் ராமசுப்பிரமணியன், பொதுவிநியோகத்திட்ட சார்பதிவாளர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி
சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், புதிய தமிழகம் கட்சி தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பொங்கள் பரிசுத் தொகுப்பு திட்டத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ஓட்டப்பிடாரம், குலேசெகரநல்லூர். முறம்பன், சங்கம்பட்டி. மலைபட்டி, புளியம்பட்டி ஆகிய கிராமங்களில் பொங்கள் பரிசுத் தொகுப்பு திட்டத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் பட்டவராயன் (தூத்துக்குடி), கதிரேசன் (ராமநாதபுரம்), அய்யப்பன் (திருச்சி), செல்லப்ப (நெல்லை), ராமராஜ் (விருதுநகர்), மாநில தொண்டரணி அமைப்பாளர் பூவாணி லட்சுமணபாண்டியன், ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் செல்லத்துரை, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் கண்ணன், நெல்லை மாநகர இணை செயலாளர் எட்வர்ட், திருச்சி மாநகர செயலாளர் சங்கர், வீராபாண்டிய கட்டப்பொம்மன் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமதாஸ் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி தரக்கூடாது: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

ராமதாஸ் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி தரக்கூடாது: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் பருவ மழை பொய்த்துள்ளதால், டெல்டா மாவட்டங்களை போல, தென் மாவாட்டங்களிலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்ட விவசாயிகளுக்கும் ரூ.13 ஆயிரம் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி, 18-ந்தேதிக்கு பின் போராட்டம் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு 8 மணி நேரமாவது மின்சாரம் வழங்க வேண்டும்.

ஏழைகளுக்கு இலவச பொங்கல் பொருள் ரூ.110 அடக்கத்தில் வழங்குகின்றனர். அரசு ஊழியர்களுக்கு போனஸ் ரூ.3000 வரை வழங்குகின்றனர். இந்த பாகுபாட்டை நீக்க வேண்டும். பட்டியல் இனத்தில் உள்ளவர்களில், அருந்ததியினருக்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்கியது கண்டிக்கத்தக்கது. 5 ஜாதிகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்ககோரி பிப்ரவரி 6-ந்தேதி திருநெல்வேலியில் போராட்டம் நடத்தப் படும்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அரசியலில் உச்சத்திற்கு சென்றார். தற்போது கீழே இறங்கி, மீண்டும் ஜாதி என்ற பாலர் பாடம் படிக்கிறார். தலித் மக்களுக்கு எதிராக, மற்ற ஜாதியினரை தூண்டி விடுவது கண்டிக்கத்தக்கது. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தை, மாற்றி அமைக்க வேண்டும் என வருகிற 24-ந்தேதி ராமதாஸ் போராட்டம் அறிவித்துள்ளார்.

இதற்கு போலீசார் அனுமதித்தால், தலித் அமைப்புகள் சார்பில் அதே இடத்தில், அதே நாளில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ம.க.வை எதிர்த்து புதிய தமிழகம் போராடும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

பா.ம.க.வை எதிர்த்து புதிய தமிழகம் போராடும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


கரூரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது வறட்சி நிலவுகிறது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.13 ஆயிரம் வழங்கவேண்டும். டெல்டா பகுதியில் அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.

இதுபோல தமிழகத்தில் மேற்கு மற்றும் மத்திய மாவட்டகளிலும் ஏற்பட்டுள்ள வறட்சி பகுதிகளை அமைச்சர்கள் குழுவினரை பார்வையிட அனுப்பி வைக்க வேண்டும். தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகை மற்ற மாவட்டங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் 14 மணிநேரம் முதல் 16 மணிநேரமும் மின்வெட்டு இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக மின்சாரம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்.

உட்பிரிவு சாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அபற்றி எந்த நடவடிக்கைகளும் இல்லை. எனவே அடுத்த மாதம் 6-ந்தேதி அனைத்து ஒன்றியங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் பேச்சு சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. அவர் மதுரையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட கலெக்டர் அத்தகைய நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ராமதாஸ் நடந்து கொண்டது முறையல்ல. வன்கொடுமை சட்டத்தை வாபஸ் பெறகோரி பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபற்றி அவர்கள் போராட்டம் நடத்தினால் அதே இடத்தில் பா.ம.வை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திங்கள், 31 டிசம்பர், 2012

கட்டபொம்மன் வாரிசுகளுக்கான நிலத்தை "மாஜி' எம்.எல்.ஏ., அபகரித்ததாக டாக்டர்.கிருஷ்ணசாமி புகார்

சென்னை: கட்டபொம்மன் வாரிசுகளுக்கு, அரசு அளித்த நிலங்களை, அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., அபகரித்துள்ளார், என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: ஒட்டபிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பாஞ்சாலங்குறிச்சியில், கட்டபொம்மனின் வாரிசுகள், 120 பேருக்கு, தமிழக அரசு, 1970ல், தலா, 3 ஏக்கர் நிலம் அளித்தது. இந்த நிலத்திலிருந்து, பெரும்பகுதியினரை வெளியேற்றி, 200 ஏக்கர் நிலத்தை, அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., மோகன் அபகரித்துள்ளார்.
அபகரித்த நிலத்திலிருந்து, கிரானைட், மணல், செம்மண் ஆகியவற்றை, சட்டவிரோதமாக எடுத்து விற்று வருகிறார். இதுகுறித்து, போலீஸ் மற்றும் முதல்வருக்கு புகார் செய்தேன்; சட்டசபையிலும், இப்பிரச்னையை எழுப்பினேன்.
இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசாருடன், பாஞ்சாலங்குறிச்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள, கட்டபொம்மன் வாரிசு நிலங்களை பார்வையிட, கடந்த இருநாள்களுக்கு முன் சென்றேன். அப்போது, மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எங்களை தடுத்ததோடு, போலீசார் முன்னிலையிலேயே, புதிய தமிழக கட்சியினரை தாக்கினர். இதில், கட்சியின் மாவட்ட செயலர் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார். சுதந்திரப் போராட்ட வீரரின்வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை, ஆளும் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரே அபகரித்து, கனிம வளங்களை கொள்ளையடித்து வருகிறார். அவருக்கு, போலீஸ் மற்றும் அதிகாரிகள் துணையாக உள்ளனர். இதுகுறித்து, உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கிருஷ்ணசாமி கூறினார்.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி புதியதமிழகம் கட்சி மும்முனைப் போரட்டம்



தொல்காப்பியருடைய காலத்தில் மருத நில மக்களாக அடையாளப்படுத்தப்பட்ட வேளாண்குடிமக்கள் இன்றைய தேவேந்திர குல வேளாளர்கள் ஆவர். காலப்போக்கில் அத்தொன்மை வாய்ந்த தமிழ்குடி மக்கள் பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர் என மருவி அழைக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக்கூடிய வேளாண்குடி மக்களை ”தேவேந்திர குல வேளாளர்” என ஒரே பெயரில் அழைத்திட அரசாணை பிறப்பிக்க உரிய சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
 அரசு மற்றும் பொது நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை பெறும் பொருட்டு  சமூகம், பொருளாதாரம், வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட மக்களை அகில இந்திய அளவில் ஒருங்கிணைத்து “ அட்டவணை சமுதாய மக்கள்” என அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகைப்படுத்தினார். தமிழகத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட பிரிவில் 76 சாதிகள் உள்ளடங்குவர். இதில் பள்ளர் என்ற “தேவேந்திர குல வேளாளர்” சக்கிலியர் என்ற ”அருந்ததியர்” பறையர் என்ற ”ஆதிதிராவிடர்” ஆகிய மூன்று பிரிவினர் பெரும்பான்மையினர் ஆவர்.
அகில இந்திய அளவிலும் மற்றும் பிற மாநிலங்களிலும் இதே போன்று அட்டவணைக்குள் அடங்கிய பல்வேறு இன மக்களை தனித்தனியாக அந்த சாதியினுடைய பெயராலும், இட ஒதுக்கீட்டை பெறும் பொருட்டு அரசால் வழங்கப்படும் சான்றிதழ்களில் எஸ்.சி அல்லது அட்டவணை சாதி என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் அட்டவணை சாதிக்கு உட்பட்ட 76 சாதிகளையும் ”ஆதிதிராவிடர்கள்” என்று அப்பட்டியலில் உள்ளடங்கிய ஒரு சாதியின் பெயரால் அழைக்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து இன்று வரையிலும் நீடித்து வருகிறது.
இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக “பட்டியலின” மக்களிடையே தேவையற்ற முரண்பாடுகளும், ஒற்றுமையின்மையும் நிலவி வருகிறது.எனவே பட்டியலின மக்களின் நலன்களுக்கான அரசுத்துறைக்கு ”ஆதிதிராவிடர் நலத்துறை” என இதுவரை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்து “பட்டியலின மக்கள்” என பொதுவாக அழைத்திட வலியுறுத்தியும்
 அட்டவணை மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு மாற்றம் செய்வதற்கு மாநில அரசிற்கு தனியாக உரிமை இல்லை. கடந்த காலங்களில் ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அந்த அரசு கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு சட்டங்கள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2008 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டை அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் சிதைத்து, மேலும் இந்தியா முழுமைக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பொது பிரிவினருக்கு அடுத்தபடியாக முன்னுரிமை பெற்றிருந்த அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முதல் வாய்ப்பை தமிழகத்தில் மட்டும் பட்டியலின மக்களில் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடிய  சக்கிலியர் அல்லது அருந்ததியர் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு பிரிவினருக்கு மட்டுமே கிடைக்ககூடிய வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் விளைவாக கடந்த மூன்று வருடங்களாக பல்கழைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உருவான அனைத்து ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசினுடைய 110 துறைகளில் உயர் பதவிகள் அனைத்தும் அருந்ததியர் என்ற ஒரே சாதிக்கு மட்டுமே தாரை வார்க்கப்பட்டது.
இதன் காரணமாக  பள்ளர் எனும் “தேவேந்திரகுல வேளாளர்கள்”, பறையர் என்று அழைக்கப்படக்கூடிய  ”ஆதிதிராவிடர்கள்” உட்பட பிற 70 சாதி மக்களின் படித்த பிள்ளைகள் எண்ணற்ற வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்துள்ள இந்த அரசு தி.மு.க. அரசு கொண்டுவந்த உள் இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் ரத்து செய்ய தயக்கம் காட்டுகிறது.
இந்த அரசு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர்களு இது  பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. எனவே பட்டியலின மக்களின் பெரும்பான்மை பிரிவினரின் உரிமையைப் பறிக்கும் உள் இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்யயும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் மும்முனைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.

வியாழன், 20 டிசம்பர், 2012

குவாரியில் மோதல்: கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. உட்பட 32 பேர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே ஒரு கல் குவாரியில் ஏற்பட்ட மோதலில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 32 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ளது ஓட்டப்பிடாரம். இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் வெள்ளாரம் என்ற கிராமத்தில் கல்குவாரி ஒன்றை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மோகனின் உறவினர் வீரபெருமாள் என்பவர் அரசு அனுமதியுடன் நடத்தி வருகிறார். இங்கு முறைகேடுகள் நடப்பதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி தனது ஆதரவாளர்கள் 7 பேருடன் கல்குவாரியை ஆய்வு செய்ய சென்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வீரபெருமாள் முன்னாள் எம்.எல்.ஏ. மோகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மோகன் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர். இதில், வீரபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., அவரது ஆதரவாளர் பட்டவராயன், கண்ணப்பன், சுப்ரமணியன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதே போல, கிருஷ்ணசாமி தரப்பைச் சேர்ந்த பட்டவராயன் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், வீரபெருமாள் உட்பட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மேலும் கலவரம் வெடிக்குமோ என பொது மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

புதிய தமிழகம் கோரிக்கைகள் அதிமுக., அரசு புறக்கணிப்பு

கடையநல்லூர் : எங்களது கோரிக்கைகளை அதிமுக., அரசு நிறைவேற்றவில்லை எனவும், சங்கரன்கோவில் அதிமுக வெற்றிக்கு புதிய தமிழகம் தான் முக்கிய காரணமாக இருந்தது எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியின் 15ம் ஆண்டு விழா சிறப்பு மாநாடு கடையநல்லூரில் நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.,தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் அய்யர், நிலக்கோட்டை எம்.எல்.ஏ., ராமசாமி, மாவட்ட செயர் சுப்பிரமணியன் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் எம்எல்ஏ., கிருஷ்ணசாமி பேசியதாவது: கட்சி துவங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது என்றால் அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கட்சியின் மாநாடுகளை பல்வேறு மாவட்டங்களில் புதிய தமிழகம் நடத்தி காட்டியது. யாரிடமும் நிதி கேட்டு செல்லும் கட்சியாக ஒருபோதும் இருந்ததில்லை. கொள்கை அடிப்படையில் தான் புதிய தமிழகம் செயல்பட்டு வருகிறது. எவ்வித பிரதிபலன்களை எதிர்பார்க்காமல் ஏழை, எளிய மக்களுக்காக உருவான இயக்கம் தான் புதிய தமிழகம். பதவியை நோக்கியும் கட்சி ஆரம்பிப்பார்கள், வெற்றியை எதிர்பார்த்தும் கட்சியை ஆரம்பிப்பார்கள். ஆனால் புதிய தமிழகம் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு கொள்கை அடிப்படையில் உருவான கட்சியாக திகழ்ந்து வருகிறது. காங்., ஆட்சிக்கு பின் தொடர்ந்து தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி, மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில் புதிய தமிழகம் மக்கள் நலனுக்காக அரசியல் இயக்கங்களில் ஈடுபட்டு தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்ற கட்சியாக செயல்பட்டு வருகிறது. மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்னைக்கு முதலில் குரல் கொடுத்த கட்சி புதிய தமிழகம் தான். அன்றைய தினம் 150 ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டுமென்ற கருத்தை இன்று பல்வேறு கட்சிகள் சட்டசபையில் கூறி வருகின்றனர். கடந்த தேர்தலில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து அதிமுகவிடம் புதிய தமிழகம் தேர்தல் கூட்டணி அமைத்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை ஆஸ்பத்திரியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் முதல்வர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தையும் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டார். அப்படியிருக்கும்போது புதிய தமிழகம் முன்வைத்த கோரிக்கைகளை மட்டும் ஏன் யோசிக்க வேண்டும். புதிய தமிழகத்தை பொறுத்தவரை ஆதரித்தாலும் முழுமையாக ஆதரிக்கும், எதிர்த்தாலும் முழுமையாக எதிர்த்து செயல்படும். சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு புதிய தமிழகம் ஆதரவு அளித்தது. அப்பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் 40 ஆயிரம் வாக்குகளை கூட்டணியில் இடம் பெற்ற அதிமுகவிற்கு பெற்று தந்தோம். ஆனால் அதன்பிறகும் கூட எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஜனநாயக நாட்டில் மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை ஓட்டுரிமைதான். எனவே சட்டசபை தேர்தலில் ஒரு முடிவு, பார்லி., தேர்தலில் ஒரு முடிவு என்ற சூழ்நிலையை அதிமுக அரசு புதிய தமிழகத்திற்கு ஏற்படுத்தும் சூழ்நிலை தரவேண்டாம். இரண்டு ஆண்டுகளாக எத்தனை முறைதான் எங்கள் கோரிக்கை குறித்து குரல் கொடுப்பது. தமிழகத்தில் புதிய தமிழகம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முதல் துவங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வேளாண்குடி மக்களை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அழைத்திட அரசாணை பிறப்பிக்கவும், ஆதிதிராவிடர் என்ற பெயராலும், ஆதிதிராவிடர் நலத்துறை எனவும் இதுவரை தமிழக அரசு பிறப்பித்துள்ள அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்து அட்டவணை மக்கள் அல்லது பட்டியல் இன மக்கள் என பொதுவாக அழைத்திட வேண்டுமெனவும், தமிழகத்தில் உள்ள உள் இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்திடவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கடையநல்லூர் புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் குமார், தொகுதி பொறுப்பாளர் சுடலைத்துரை, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆறுமுகச்சாமி, நகர செயலாளர் முருகையா, கவுன்சிலர்கள் மகேஸ்வரி, ராஜா, நகர துணை செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக புதிய தமிழகம் கட்சி சார்பில் நலிந்தோருக்கு நலத்திட்டங்களை கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., வழங்கினார்.