எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 9 ஜூன், 2011

போர்க் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்:இலங்கை மீது பொருளாதார தடை தீர்மானத்தின் மீது டாக்டர் க கிருஷ்ணசாமி அவர்கள் பேச்சு

 

 

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
தமிழகத்தினுடைய எல்லையிலிருந்து 26 கிலோ மீட்டர் அப்பாலுள்ள இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் தங்களுடைய சுதந்திரத்திற்காகவும், சுய நிர்ணைய உரிமைக்காகவும் ஐம்பதாண்டு காலத்திற்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். எனினும் அவர்களுடைய போராட்டம் இன்னும் முற்றுப்பெற்றதாகத் தெரியவில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிரான போர், தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டுகிறேன் என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதியும், மே மாதம் 18 ஆம் தேதியும் சிங்களப் பேரினவாத அரசு, ராஜபக்சே அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலில் முள்ளிவாய்க்காலில் முப்பதாயிரம் பேர்கள் ஒரே நேரத்தில் படுகொலைக்கு ஆளானார்கள். இப்படிப்பட்ட சர்வதேச போர் விதிமுறைகளுக்கு மாறாக ஈழத் தமிழ் மக்கள் மீது போர் தொடுத்த ராஜபக்சே சர்வதேச நீதிமன்றத்திலே குற்ரவாளியாகக் கருதப்பட வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்கும் மேலாக உலகெங்கும் வாழக்கூடிய தமிழ் மக்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.


மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈழத் தமிழ் மக்கள் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதம் இருந்தபொழுது நாங்களெல்லாம் அதிலே கலந்துகொண்டு வாழ்த்தினோம். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தப் போர் முடிந்த பிறகு நான் கோவையிலே நடத்திய மாநாட்டிற்காக மலேசிய தமிழர்களை அழைப்பதற்குச் சென்றேன். நீங்கள் எல்லோரும் தமிழகத்திலிருந்து எதற்காக வருகிறீர்கள்; இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது தமிழகத்திலிருந்து எதிர்ப்பு குரல் வரவில்லை. இங்கே இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் குரல் கொடுக்கவில்லை என்று தமிழர்கள் எல்லோரும் வெட்கி, நாணித் தலைகுனியக்கூடிய வகையிலே உலகத் தமிழகர்கள் நம்மையெல்லாம் ஏளனமாகப் பார்த்தார்கள் என்று ஆறு கண்டங்களிலே வாழ்கின்ற எட்டு கோடி தமிழர்களுடைய தன்மானத்தைத் தூக்கி நிறுத்தக்கூடிய வகையிலே மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சார்பாக (மேசைத் தட்டும் ஒலி) தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட வேண்டுமென்று கொண்டுவரப்பட்டிருக்கின்ற தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன்.


நேற்று அன்பு சகோதரர் திரு.குணசேகரன் அவர்கள் பேசியபொழுது அம்மா அவர்கள் கருத்து சொல்லவில்லையே என்று ஏங்கினேன். ஆனால் அந்தக் கருத்தை ஒரு நாள்கூட என்னுடைய ஏக்கதை விட்டுவைக்கவில்லை. (மேசைத் தட்டும் ஒலி) இன்றே விடையளித்திருக்கிறார்கள்.


பேரவைத் தலைவர் அவர்களே, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த போர் சாதாரணமானதல்ல இந்த போர் இன்றும் முற்றுப்பெற்றதாகத் தெரியவில்லை. ஒரே நாளிலே முப்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டார்கள். மூன்று இலட்சத்திற்க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அவர்களையெல்லாம் விடுதலை செய்துவிட்டோம் என்று சென்னார்கள் ஆனால் இன்றும் இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறு சிறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய அரசால் ஈழத் தமிழ் மக்களுக்காக அனுப்பபபடக்கூடிய எந்தவிதமான உதவிகளும் தமிழ் மக்களுக்குச் சென்றடைவதில்லை. 500 டிராக்டர்கள் அனுப்பினார்கள் அதிலே 28 டிராக்டர்கள் மட்டும்தான் தமிழர்களுக்குச் சென்றடைந்திருக்கின்றன. 50,000 வீடுகள் கட்டுவதற்கு வேண்டிய இலட்சக்கணக்கான சிமெண்ட் மூட்டைகளை இந்திய அரசு அனுப்பி வைத்தது. அவை தமிழர்களுக்குச் சென்றடையவில்லை.


 எனவே இதுவெல்லாம் நடைபெறுவதற்குக் காரணம் என்னவென்று சொன்னால் அங்கிருக்கக்கூடிய சிங்களப் பேரினவாத அரசு, தமிழ் மொழியையும் தமிழினத்தையும் சிங்களர்களுக்கு நிகராக மதிப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. தமிழ் மக்கள் தானாக முன்வந்து ஆயுதப் போராட்டங்களை எடுக்க முன்வரவில்லை. 50 ஆண்டுகாலத்திற்கும் மேலாக ஜனநாய ரீதியான போராட்டங்களை நடத்தினார்கள். ஏதோ ஒரு சில ஜனநாயகவாதிகள் சிங்கள அரசிலே பதவி வகித்தவர்கள், தமிழர்களுக்கு ஏதாவது உறுதி கொடுக்க வந்தால் அவர்களும் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள், அல்லது பதவியிறக்கம் செய்யப்பட்டார்கள். இந்தநிலையில்தான் தமிழினத் தலைவர் தந்தை செல்வா அவர்களுடைய தலைமையில் வட்டக்கோட்டை மாநாட்டிலே தமிழர்களுக்கு தனி நாடு போன்றதொரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதுதான் பின்பாக தனி ஈழக் கோரிக்கையாக மலர்ந்தது. 


எனவே தனி ஈழம் அவர்கள் கேட்கக்கூடிய சூழ்நிலை எப்போது உருவாயிற்று என்று சொன்னால் தமிழ் மொழிக்கு ஒர் அங்கீகாரம் இல்லாதது தமிழர்கள் சமமாக மதிக்கப்படாத சூழ்நிலை உருவாயிற்று. இதைத்தான் சிங்களத்திலேயிருந்து வந்த பாதிரியார் மிக அழகாகச் சொன்னார். If there are two langauages, there will be one nation. If there is only one language, there will be two nations. அதாவது இரண்டு மொழிகள், இரண்டு இனங்கள் என்று சொன்னால் ஒரு தேசமாக இருக்கும். ஒரே மொழி, ஒரே இனம் என்று சொன்னால் இரண்டு தேசங்களாக இருக்கும் என்று அழகாகச் சொன்னார்கள். அந்த அடிப்படையில்தான் தமிழர்களுக்குச் சமமான அந்தஸ்து இல்லை, மதிப்பு இல்லை, மரியாதை இல்லை எனவே தங்களால் அவர்களோடு இணைந்து வாழ முடியாத சூழலில்தான் அவர்கள் தனி ஈழம் கேட்டார்கள். அவர்கள் அதற்காகக் கொடுத்த விலை இரண்டு இலட்சம் உயிர்கள். எனவே அப்படிப்பட்ட அந்த நியாயத்திற்காகவும், ஜனநாயக உரிமைக்காகவும் போராடிய தமிழ் மக்கள் மீது சர்வதேசப் போர் விதிமுறைகளுக்கு மாறாக நடந்துகொண்ட ராஜபக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினால் மட்டும்தான் தமிழர்கள் அங்கே சமமாக வாழமுடியும். அவர்களும் மனிதர்களாக வாழ முடியும். எனவே அப்படிப்பட்டதொரு தீர்மானம் இந்த அவையிலே நிறைவேற்றப்படுவது மட்டுமல்ல அவர் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்படுகின்ற வரையிலே இங்கிருந்து குரல் ஆதரவுக் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.


அதுமட்டுமல்ல இப்போது அங்கே ஈழத்திலே என்ன நடக்கிறது என்பதை அறிந்து வருவதற்கும் மாண்புமிகு அம்மா அவர்களே, தமிழகத்திலேயிருந்து ஒரு சட்டமன்றக் குழுவை அனுப்பி வையுங்கள் உண்மை நிலைமையைத் தெரிந்து வருவதற்காக அப்போதுதான் அங்கே இருக்கக்கூடிய நிலைமைகளையெல்லாம் தமிழக மக்களுக்கும் சொல்ல முடியும், இந்திய அரசுக்கும் சொல்ல முடியும். எனவே இப்போது இந்தத் தீர்மானம் என்பது தமிழகத்துனுடைய வரலாற்றில் உலகத் தமிழர்களுடைய வரலாற்றில், உலகெங்கும் வாழக்கூடிய அகதிகளாக வாழக்கூடிய 15 இலட்சம் தமிழர்கள் ஈழத்திலே இன்னும் குற்றுயிரும் கொலையுயிருமாக இருக்கக்கூடிய தமிழர்களுக்கு ஓர் ஆதரவுக் கரமாக இருக்கும். இதுதான் ஈழத் தமிழர்களுடைய விடுதலைக்கு உண்டான ஒரு திறவுகோலாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன். எனவே இந்தத் தீர்மானத்தை நான் மனதார வரவேற்று விடைபெறுகிறேன். வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக