சென்னை : ""தமிழகத்தில் அரசு மட்டுமே கேபிள், "டிவி' நடத்த உடனே சட்டம் கொண்டு வர வேண்டும்,'' என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் கிருஷ்ணசாமி கூறியதாவது: மக்களின் எதிர்பார்ப்பை, அ.தி.மு.க., அரசு நிச்சயம் நிறைவேற்றும்.உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளிலிருந்த, தி.மு.க.,வினர், சட்டசபை தேர்தல் அறிவித்ததும், இஷ்டத்திற்கு நிதிகளை செலவு செய்து விட்டனர். உள்ளாட்சி அமைப்புகளில் தவறு செய்தவர்கள் மீது, இந்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் லட்சக்கணக்கில் அப்பாவி தமிழர்களை, போர் என்ற பெயரில் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு நிவாரண பணி முறையாக நடக்கிறதா என்று கண்டறிய, தமிழக அரசு, சட்டசபைக் குழு ஒன்று அமைத்து இலங்கைக்கு அனுப்பி, தமிழர்கள் நிலையை நேரில் பார்த்து வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் இறந்தது குறித்து விசாரணை தீவிரப்படுத்த வேண்டும். தேர்தலில் மக்கள் என்னை, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்துள்ளனர். சமுதாய நல்லிணக்கத்திற்கு உறுதுணையாக இருப்பேன். புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் வரும், ஜூன் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடக்க உள்ளது. அரசு கேபிள், "டிவி' உடனடியாக செயல்படுத்தப்படுவதுடன், அரசு மூலம் மட்டுமே கேபிள் "டிவி' நடத்தப்படும் என்று உடனே சட்டம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக