எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 5 ஜூன், 2011

விவசாயிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கச் செய்வேன்: டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு

 


விவசாயிகளுக்கு அரசு அறிவிக்கும் சலுகைகள் கிடைக்க செய்வேன் என்று புதிய தமிழகம் கட்சி தலைவரும், ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமி தேர்தலில் வெற்றிபெற்றதும் தொகுதி பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியில் திறந்த ஜீப்பில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்னிலையில் கலந்துரையாடினார். 

அப்போது பொதுமக்கள் அவரிடம் மனுக்களை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது: இந்த பகுதியில் விவசாயிகள் அதிகமாக உள்ளனர். அனைத்து விவசாயிகளும் வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு அரசு அறிவிக்கும் அனைத்து சலுகைகளையும் ஒரு பைசாகூட லஞ்சம் வாங்காமல் பெற்றுத்தர பாடுபடுவேன். 

இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கன்னடியன் கால்வாய் திட்டத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து சட்டமன்ற செயலரிடம் மனு கொடுத்து உள்ளனர். மேலும் பஸ் வசதி, குடிநீர் பிரச்சினை குறித்தும் தெரிவித்து உள்ளீர்கள். உங்கள் குறைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசி விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். உங்கள் பிரச்சினைக்காக என்னை எந்த நேரத்திலும் அணுகலாம்.

முன்னதாக அத்திமரப்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர். முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய விவசாய அணி செயலாளர் வி.பி.ஆர்.சுரேஷ், பஞ்சாயத்து செயலாளர் கோட்டாளமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக