மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
சமர்சீர் கல்வி திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து கொண்டு வரப்பட்டிருக்கக் கூடிய சட்டமுன் வடிவை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் ஆதரிக்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்விமுறை திருத்த சட்டமுடிவின் மீது புதிய தமிழகம் கட்சியினுடைய கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன். தமிழ்நாடு அரசைப் பொறுத்தமட்டிலும் ஒரு சட்டத்திருத்தம் முன்வடிவு வைத்த காரணத்தினாலேயே சமச்சீர் கல்விக்கு எதிராக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை சொல்ல முடியாது என்று கருதுகிறேன். இந்த அரசினுடைய நோக்கம் ஒரு பள்ளத்தை நிரப்பிடலாமே தவிர மேட்டை வெட்டி இன்னோரு பள்ளம் உருவாக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் தான் (மேசையைத் தட்டும் ஒலி) இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென்று நான் கருதுகிறேன். சமர்ச்சீர் கல்வி என்பது அடித்தளத்திலேயிருந்து வருகை தந்திருக்கின்ற என்னைப் போன்றவர்கள் எல்லாம் சமச்சீரை பாராட்டித்தான் ஆக வேண்டும். ஆனால் சமச்சீர் என்பது வெறும் பொதுப் பாடத் திட்டமாக நிச்சயமாக இருக்க முடியாது.
தமிழகத்தில் வாழக் கூடிய 7 கோடி தமிழக மக்களிலே 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், வசதி படைத்தவர்கள், வசதியற்றவர்கள், நடுத்தர மாணவர்கள் என்று அழைக்கப்படக்கூடிய அனைத்து சமுதாய மக்களுக்கும், கிராமப்புறங்களிலே வாழக்கூடிய மக்களுக்கும் கல்விக்கூடங்களிலே வசதிகள் சமமானதாக இருந்தால்தான் அந்தக் கூடத்திலேதான் பொதுவான கல்வித் திட்டத்தை வைக்க முடியுமே தவிர வெறும் பொதுப் பாடத் திட்டத்தை மட்டும் முன்வைப்பதாலே நிச்சயமாக சமச்சீரான ஒரு கல்வித் திட்டத்தை உருவாக்க முடியாது. Being determines the conscious – வாழ்நிலையே எண்ணங்களை தீர்மானிக்கிறது என்ற அடிப்படையில் எந்தப் பள்ளிக்கூடத்தில் எந்த வசதி வாய்ப்போடு படிக்க வாய்ப்பு இருக்கிறதோ அவர்களிடத்தில் தான் உயர்ந்த சிந்தனைகள், நல்ல நோக்கங்கள் எதிர்காலத்திலே நல்ல ஒரு சமுதாயத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய சிந்தனைகள் வரும். அந்த அடிப்படையிலே பொதுவான பாடத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பாக பொதுவான, சமமான வாய்ப்புகள் இருக்கக் கூடிய பள்ளிகளுக்கு அடிக்கட்டுமானங்களை உருவாக்குவது தான் நோக்கம். அந்த அடிக்கட்டுமானங்களுடன் தான் பொதுப் பாடத் திட்டமும் உருவாக வேண்டுமென்ற நோக்கத்தோடு தான் இன்று இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று கருதுகிறேன். ஏனென்று சொன்னால் Ultimate ஆக இறுதியாக எல்லோருடைய இலட்சியம் தரமான கல்வி என்பது தான் இலக்காக இருக்க வேண்டும். எனவே தரமானா கல்வி அரசு கொடுப்பதற்கு நிச்சயமாக முயற்சி செய்யும். ஒராண்டு அல்லது இராண்டு தள்ளி வைத்தாலும் கூட அந்த இலக்கோடு இப்போது சட்டத்திருத்த முன்வடிவை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன். நன்றி வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி)
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு மாநிலத்தில் சட்டமன்ற மேலவை ஒன்றைத் தோற்றுவிக்கலாம் என்று எடுக்கப்பட்ட முடிவு இச்சட்டப் பேரவையால் திரும்பப் பெற வேண்டுமென்று தமிழக முதல்வர் அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் மனதார வரவேற்கிறேன்.
கடந்த ஆட்சியாளர்களால் மேலவை கொண்டு வரப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபொழுது இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்களில் நானும் ஒருவன். சட்டமன்ற மேலவைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை, பெண்களுக்கு இல்லை அதைப்போலவே உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் இல்லை என்ற குறைகளையெல்லாம் சுட்டிக்காட்டி, அப்படிப்பட்ட குறைகளோடு அமைக்கின்ற மேலவை தமிழகத்திற்குத் தேவையில்லை என்று நாங்கள் வாதிட்டோம்.
எனவே இப்போது புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய தலைமையில் ஒரு மகத்தான ஆட்சி அமையப்பெற்று இன்று அந்த மேலவையை இரத்து செய்யக்கூடிய இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுகின்ற பொழுது அதை நான் மனதார வரவேற்கிறேன்.
மேலும் இந்திய ஜனநாயகத்தில் இந்திய அரசியலமைப்பில் ஏழை எளியவர், படித்தவர், படிக்காதவர் என்று அனைவருக்கும் சமமான வாக்குரிமைகள் அளிக்கப்பெற்று அந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் மக்கள் மன்றம் ஒன்று வந்தபிறகு மறைமுகமாகத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு அமைப்பு தேவையில்லை. எனவே இங்கே வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, பொறியியல் வல்லுநர்களாக, ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக 234 பேர்கள் ஏழு கோடி தமிழ் மக்களுடைய வாழ்வாதாரத்தை தீர்மானிக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள். எனவே இதற்கு இணையான ஒரு அமைப்பு தேவையில்லை. மேலும் அந்த மேலவையின் காரணமாக இன்னும் கூடுதலாக செலவு இந்த அரசுக்கு ஏற்படுவதும் ஏற்புடையதல்ல. ஏற்கனவே கடந்த ஆட்சியாளர்கள் ஒரு இலட்சம் கோடி கடனாக நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். இதை சமாளிப்பதற்கே நமக்கு இன்னும் சில காலம் தேவைப்படும் எனவே இப்படிப்பட்ட ஒரு சூழலில் சுமையை உருவாக்கக்கூடிய மேலவையை இரத்து செய்வதற்கு தமிழக முதல்வர் அவர்களால் கொண்டுவரப்படுகின்ற இந்த தீர்மானத்தை முழுமையாக வரவேற்று அமர்கிறேன்.
நன்றி வணக்கம்
சட்ட பேரவைத் தலைவர்,துணை தலைவர் தேர்தல் - டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வாழ்த்து 27.05.2011
நன்றி வணக்கம்
சட்ட பேரவைத் தலைவர்,துணை தலைவர் தேர்தல் - டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வாழ்த்து 27.05.2011
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.” என்ற குறளுக்கு இலக்கணமாக திகழும் 14வது சட்டமன்றத் தினுடைய பேரவைத் தலைவராக ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டிருக்கின்ற மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும் துணைத் தலைவர் திரு.தனபால் அவர்களுக்கும் “புதிய தமிழகம் கட்சியின்” சார்பாகவும் என் சார்பாகவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வந்த குடும்ப ஆட்சி (குறுக்கீடு) ஆகியவற்றை எதிர் கொண்டு தமிழக மக்களை விடுதலை செய்து மூன்றாவது முறையாகத் தமிழகத்திலே (மேசையைத் தட்டும் ஒலி) ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கின்ற புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
2வது முறையாக சட்டப் பேரவைக்கு என்னை தேர்தெடுத்த ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், தமிழகத்திற்கு ஒரு விடிவுகாலத்தை உருவாக்கும் பொருட்டு அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு தலைமை தாங்கிய அம்மா அவர்களுக்கும்,(மேசையைத் தட்டும் ஒலி) அனைத்துக் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்தப் பேரவையிலே வீற்றிருக்கின்ற தலைவர் அவர்கள் பேரவைத் தலைவர் ஆவதற்குண்டான அனைத்துவிதமான தகுதிகளையும் கூடுதலாகப் பெற்றிருக்கக் கூடியவர், எளிய சமுதாயத்தில், மீனவச் சமுதாயத்திலே பிறந்து தமிழகத்தினுடைய வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியவினுடைய வரலாற்றில் முதல் தொழிற்சங்கத்தை பொதுவுடமை தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்குக் காரணமான சிங்காரவேலர் அவர்களுடைய வழியிலே வந்தவர். எனவே பிறப்பிலேயே பொது உரிமை, பொதுவுடமைத் தத்துவத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்கள். இந்த அவை எவ்வளவு மேன்மையாக நடத்திச் செல்ல வேண்டுமென்ற தேர்வு பெற்றவர். அமைச்சராக விளங்கி, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி எல்லாவிதமான அனுபவங்களையும் பெற்றிருக்கக் கூடியவர் நிச்சயமாக தமிழக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், உழைப்பாளி மக்கள், தமிழக மக்கள் எண்ணற்றோர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களுடைய கருத்துக்களை எல்லாம் இந்த மன்றத்திலே எடுத்து வைக்கின்றபோது நீங்களும் மனமுவந்து சிறிய கட்சிகள், பெரிய கட்சிகள் எண்ணிக்கை அதிகம், குறைவு என்ற வேறுபாடு இல்லாமல் இன்னும் சொல்லப்போனால் சிறிய கட்சிகளுக்கு கூடுதலான நேரம் ஒதுக்கியும் உங்களுடைய அன்பை காட்டி எங்களுடைய கருத்துக்களையெல்லாம் எடுத்து வைப்பதற்கு நீங்கள் முன் உதாரணமாக விளங்க வேண்டுமேன்று கேட்டு, மீண்டும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தங்களையும், துணைத் தலைவரைம் வாழ்த்தி விடைபெறுகின்றேன். வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக