எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 5 ஜூன், 2011

ஓட்டப்பிடாரம் பகுதியில் நிலத்தடிநீர் கடத்தல் முற்றிலும் தடைசெய்யப்படும்

 


ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரம் தொகுதியில் நிலத்தடி நீர் கடத்தல் முற்றிலும் தடை செய்யப்படும் என தொகுதி வளர்ச்சித்திட்ட பணிகள் ஆய்வு கூட்டத்தில் எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி உறுதி கூறினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி வளர்ச்சி பணிகள் ஆய்வு கூட்டம் ஓட்டப்பிடாரம் பஞ்.,யூனியன் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி தலைமை வகித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

 கூட்டத்தில் கடந்த 21ம் தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பெறப்பட்டுள்ள மனுக்களின் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் புதியம்புத்தூர் மலர்குளம் பகுதியில் இருந்து நிலத்தடி நீர் எடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 அதுபோல் ஓட்டப்பிடாரம் பகுதியில் இருந்து நிலத்தடிநீர் வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டு வருவதாகவும், இதில் கோர்ட் தடை ஆணை மூலம் தண்ணீர் எடுப்பது போன்று மற்ற இடங்களிலும் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் எடுக்கப்பட்டு வருவதற்கு தடை செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுபோல் சில இடங்களில் விவசாயத்திற்கு என்று இலவச மின் இணைப்பு பெற்றுக் கொண்டு வணிக நோக்கத்திற்காக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் கொண்டு செல்லப்படுவதால் மின் இணைப்பினை துண்டிக்கலாம் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் பதில் கூறும் போது வணிக நோக்கத்திற்காக மின்சாரம் திருடப்பட்டால் அதற்கு நோட்டீஸ் அனுப்பி அபராதம் விதித்து மின்கட்டணம் வசூல் செய்யப்படும். அதனை மீறி மீண்டும் மின்சாரம் தவறாக பயன்படுத்தினால் மின்இணைப்பினை துண்டிக்கலாம் என்று தெரிவித்தனர். அதனை ஏற்றுக் கொள்ளாத எம்எல்ஏ.,கிருஷ்ணசாமி, சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தினால், உடனடியாக மின் இணைப்பினை துண்டிக்கலாம் என்று தெரிவித்தார்.

 ஓட்டப்பிடாரம் பகுதியில் போலி பட்டாக்கள் அதிகமாக போடப்படுகிறது. அதனை எப்படி தடுக்கலாம் என்று சார்பதிவாளர் அதிகாரிகள் பவர் பத்திரம் போடுவதை தடை செய்தால் போலி பட்டா போடுவதை தடுக்கலாம் என்று விளக்கினர்.

 போக்குவரத்துத்துறை அதிகாரிகள், குடிநீர் வழங்கல் அதிகாரிகள் என்று அனைத்து தரப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.எம்எல்ஏ. கிருஷ்ணசாமி பேசியதாவது, தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். நிலத்தடிநீர் எடுப்பது முற்றிலும் தடை செய்யப்படும். கோர்ட் தடை உத்திரவு மூலம் வணிக நோக்கத்திற்காக நிலத்தடிநீர் எடுப்பதையும் கோர்ட்டுக்கு கொண்டு சென்று தடை ஆணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டப்பிடாரத்தில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி, பஸ் டிப்போ அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போலி பட்டாக்கள் போடுவதை தடுக்கப்படும். இவ்வாறு எம்எல்ஏ.,டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார். கூட்டத்தில் உதவிக் கோட்ட அலுவலர் விஜயராஜ், ஓட்டப்பிடாரம் தாசில்தார் மணி, சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமசுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நன்றி தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக