எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 19 ஜூன், 2011

சீவலப்பேரியில் ரூ.250 கோடி செலவில் அணை கட்ட தமிழக அரசிடம் வலியுறுத்துவேன்.டாக்டர் க.கிருஷ்ணசாமி

 


தூத்துக்குடி : தூத்துக்குடி, கருங்குளம் மற்றும் ஒட்டபிடாரம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் பயன்பெறும் வகையில் சீவலப்பேரியில் 250 கோடி ரூபாய் செலவில் அணை கட்ட தமிழக அரசை வலியுறுத்துவேன் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., தெரிவித்தார்.


புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ., தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது; ஒட்டபிடாரம் சட்டசபை தொகுதியில் விவசாயத்தை மேம்படுத்த வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவு பாங்க் உள்ளிட்ட 10 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுமார் 1500 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானிய விலையில் கொடுக்கப்படும் உரம், விதை, பவர் டில்லர், டிராக்டர், பூச்சிகொல்லி மருந்து உள்ளிட்டவைகளை சரியான முறையில் சென்று வழங்கப்படவில்லை என்று கலந்துரையாடல் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். இதுபோன்ற தவறுகள் நடைபெறக்கூடாது என்றும், அரசின் நலத்திட்டங்கள் உரிய முறையில் விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

 விவசாயிகளுக்கு பாங்குகளில் பயிர்கடன் சரிவர கொடுக்கவில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய கூட்டுறவு பாங்க், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு பயிர்கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டபிடாரம் தொகுதியில் நீர்மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் தூத்துக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கோரம்பள்ளம், பேய்குளம், பெட்டைகுளம், ஆறுமுகமங்கலம், தருவைகுளம் ஆகியவற்றில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளோம். கோரம்பள்ளம் மற்றும் பெட்டைகுளம் ஆகிய குளங்கள் தூர்வாரப்பட்டு இருகரைகளும் செம்மைப்படுத்தப்பட்டால் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும், தூத்துக்குடி மாநகர் உட்பட 300 கிராமங்களுக்கு எல்லா நாட்களிலும் குடிநீர் கிடைக்கும், சுற்றுலாத்தலமாகவும் மாற வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 62 கோடி ரூபாய் செலவில் பொதுப்பணித்துறை ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற பொதுப்பணித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.

20 எம்ஜிடி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள பெரிய தொழிற்சாலைகளுக்காக தண்ணீர் வழங்கப்பட்டு வருவதால், இனிமேல் வடகால் வாய்காலில் இருந்து தண்ணீர் எடுக்க கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. வடகாலில் இருந்து இனிமேல் தண்ணீர் எடுக்கபடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர், விவசாய பணிகளைவிட தொழிற்சாலைகளுக்கு தான் அதிக அளவில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் தொழிற்சாலைகளில் கடல்நீரை சுத்திகரித்து தண்ணீர் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு கடல் நீரில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கபட வேண்டும் என்ற உத்திரவாதத்திற்கு பின்னரே அனுமதி அளிக்க வேண்டும். 

மேலமருதூரில் உள்ள ஒரு தனியார் மின் உற்பத்தி நிலையத்தினர் மிகப்பெரிய ஓடை, சுடுகாடு, வழிபாட்டு தலங்கள், அனந்தமாடன்பச்சேரி என்ற கிராமத்திற்கு செல்லகூடிய பாதை போன்றவற்றை ஆக்ரமித்துள்ளனர். இதுபோன்ற தொ ழிற்சாலைகளால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21வது பிரிவில் கூறப்பட்டுள்ள நல்ல தண்ணீர், நல்ல காற்று, இருப்பிட வசதி போன்ற உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை உப்பாற்று ஓடையில் மிகப்பெரிய அள வில் ஆக்ரமிப்புகள் நடந்து வருகிறது. இது போன்ற ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

 தூத்துக்குடி, கருங்குளம், ஒட்டபிடாரம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் பயன்பெறும் வகையில் 250 கோடி ரூபாய் செலவில் சிவலப்பேரியில் உலக வங்கி நிதியுதவியுடன் ஒரு அணை கட்ட வேண்டும் என்று அரசை வலியுறுத்த உள்ளேன் என்றார்.


 அப்போது புதிய தமிழகம் கட்சியின் மாவ ட்ட செயலாளர் கனகராஜ், தூத்துக்குடி ஒன்றிய அதிமுக., விவசாய அணிச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக