எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 6 மார்ச், 2014

தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி...

 தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுவார் என இன்று அறிவிப்பு வெளியானது.

இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், கடந்த 3 பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிட்டு டாக்டர் கிருஷ்ணசாமி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.

எனவே இந்த முறை தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டால் உறுதியாக அவர் வெற்றி பெறுவார் என்று எங்களின் விருப்பத்தை தெரிவித்திருந்தோம். அதன்படி இன்று டாக்டர் கிருஷ்ணசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம் என்று கூறினர்.

டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடும் வேளையில் தேர்தல் வேலைகளை நாங்கள் மும்முரமாக செய்து கட்சியின் தலைவரை வெற்றிபெற அயராது உழைப்போம் என்று கூறினர். புதிய தமிழகம் கட்சி சார்பில் அதன் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் தென்காசி பாராளுமன்ற தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் கடந்த 4 முறை போட்டியிட்டுள்ளார். 2009 பாராளுமன்ற தேர்தலில் 1,16,685 வாக்குகள் பெற்றுள்ளார். 2004 தேர்தலில் 1,01,122 வாக்குகள் பெற்றார். இந்த இரு தேர்தலிலும் டாக்டர் கிருஷ்ணசாமி 3-வது இடத்தை பிடித்துள்ளார். தற்போது 5-வது முறையாக போட்டியிடுகிறார்.

தென்காசி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி தற்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். எனவே அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்.

இதனால் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உருவாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக