எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 14 மார்ச், 2014

தென்காசியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி, லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் வீ.கருப்பசாமி பாண்டியன் பேச்சு..........



தென்காசி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி லட்சக்கணக்காக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று வேட்பாளர் அறிமுக கூட்டடத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் கூறினார்.
வேட்பாளர் அறிமுக கூட்டம்
தென்காசி பாராளுமன்ற தொகுதி தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை தி.மு.க நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யும் கூட்டம் குற்றாலம் கேரளா பேலஸ் பங்களா வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. தி.மு.க மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமை தாங்கினார்.
முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் டி.பி.எம்.மைதீன்கான், பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி தி.மு.க நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் பேசியதாவது:–
இங்கு போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி பல தேர்தல்களை சந்தித்தவர். பொள்ளாச்சியில் கழக நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டவர். தேர்தல் அவருக்கு புதிது அல்ல. இவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
லட்சக்கணக்கான ஓட்டுகள்...
வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் மு.க.ஸ்டாலின், நெல்லை மாவட்டத்தில் சுற்று பயணம் செய்கிறார். அப்போது நமது அணியின் எழுச்சியை காட்ட வேண்டும். வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக பண பட்டுவாடாவை முடிக்க வேண்டும் என்று எதிர்அணியினர் தற்போது வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். இன்று இரவு முதல் நீங்கள் ஊர்காவல் படையாக விளைந்த பயிரை பாதுகாக்கும் விவசாயி போல் ஊரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இதில் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை சட்ட ரீதியாக சந்திக்க 25 வக்கீல்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நமது கூட்டணி கட்சிகளின் தற்போதைய நிலையை பார்க்கும் போது டாக்டர் கிருஷ்ணசாமி லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
மு.க.ஸ்டாலின் வரும்போது அவரது பிரசாரத்திற்கு இடையூறு இல்லாத அளவில் தொண்டர்கள் கட்டுப்பாடுடன் அவரை வரவேற்க வேண்டும். புதிய தமிழகம் தொண்டர்கள் உள்பட அனைவரும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு தி.மு.க. மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பேசினார்.
டாக்டர் கிருஷ்ணசாமி
தென்காசி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது:–
எனக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தி.மு.க தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தென் தமிழகத்தில் சகோதரத்துவம், தொழில், கல்வி, மருத்துவம் போன்றவை நல்ல வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக புதிய தமிழகம் தொடங்கிய காலம் முதல் செயல்பட்டு வருகிறேன்.
சட்டமன்றத்தில் மட்டும் குரல் கொடுத்தால் இதற்கு போதாது. அதிக நிதி வேண்டி நமது குரல் டெல்லியில் ஒலிக்க வேண்டும். அதற்கு தென்காசி தொகுதி திறவுகோலாக உள்ளது. தி.மு.க முன்னணி நிர்வாகிகள் எனக்கு உற்று துணையாக, பக்க பலமாக இருக்க வேண்டும்.
சமுதாயத்தை மாற்றும் இயக்கம்
நான் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவன் என்று நீங்கள் எந்த தயக்கமும் வேண்டாம். 1984–ல் கழக வேட்பாளராக பொள்ளாச்சியில் போட்டியிட்டேன். அப்போது அந்த தொகுதியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஏற்பட்ட உறவை இப்போதும் தொடர்ந்து வைத்துள்ளேன்.
தி.மு.க அரசியல் இயக்கம் அல்ல. சமுதாயத்தை மாற்றும் இயக்கம். பொறுப்பாளர்கள் என்னிடம் எப்போதும் தொடர்பு கொள்ளலாம். நான் உங்களில் ஒருவன். நீங்கள் தீவிரமாக செயல்பட்டு கருணாநிதி தலைமையிலான இந்த கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்கு நமது கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைத்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ஷேக்தாவூது, முன்னாள் எம்.எல்.ஏ ரசாக், தி.மு.க தணிக்கை குழு உறுப்பினர் சுபசீதாராமன், தென்காசி ஒன்றிய செயலாளர் ராமையா, முன்னாள் நகர சபை தலைவர் கோமதி நாயகம், தென்காசி செயலாளர் ஆயான் நடராஜன், யு.எஸ்.டி. சீனிவாசன், அருண்குமார், குற்றாலம் நகர செயலாளர் ராஜாராம், புதிய தமிழகம் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் இன்பராஜ், சிறுபான்மை பிரிவு செயலாளர் முகம்மது கனிப், ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக