எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 25 மார்ச், 2014

டாக்டர் கிருஷ்ணசாமி : எங்களை வெளியேற்றியதால் வலதுகரத்தை இழந்ததாக ஜெ., உணருவார்'



 கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணியில் இடம் பெற்ற புதிய தமிழகம், இரு இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க., உறவு கசந்து விட்டதால், இந்த தேர்தலில், தி.மு.க., அணியில், புதிய தமிழகம் இடம் பெற்று, தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறது. அணி மாற்றம் மற்றும் தேர்தல் நிலவரம் குறித்து, தென் மாவட்டங்களின் தலித் சமூகத்தவரின் கட்சியாக கருதப்படும் புதிய தமிழகத்தின் நிறுவனர், தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: >ஓட்டப்பிடாரத்தில் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி என்ன சாதித்தார்? ஏன் எம்.பி.,யாக விரும்புகிறார்? ஆட்சியில் யார், எந்த கட்சி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எம்.எல்.ஏ., வலுவானவாஆக இருந்தால், தொகுதியை வளப்படுத்தலாம்.என் எம்.எல்.ஏ., தொகுதி நிதி அனைத்து தரப்பிற்கும் போய் சேர்ந்துள்ளது. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டதை தடுத்து நிறுத்தி உள்ளேன். மணல் கொள்ளையை தடுத்துள்ளேன்.நிலத்தடி நீரை, தனியார் நிறுவனங்கள் உறிஞ்சிய போது, ஐகோர்ட்டில் நானே வழக்கு தொடர்ந்ததுடன், நேரில் ஆஜராகி வாதாடி தடுத்து நிறுத்தி உள்ளேன்.
தென்காசி தொகுதியில், பலமுறை போட்டியிட்டு உள்ளீர்கள். இந்த முறையாவது வெற்றி பெறுவீர்களா?

இத்தொகுதியில், அனைத்து தரப்பு மக்களிடமும் அறிமுகமான வேட்பாளர் நான் தான். இத்தேர்தலில் கூட்டணி ஒரு பலம்; வேட்பாளர் அறிமுகம் மற்றொரு பலம். இரு பலமும் எனக்கு, தேர்தலில் கண்டிப்பாக வெற்றியை தரும்.

அ.தி.மு.க., அணியிலிருந்து எதற்காக வெளியேறினீர்கள்? 
கூட்டணியில் இடம் பெற்றிருந்த நிலையில், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க தேர்தல்களில், எங்களுக்கு, 'சீட்' கொடுக்கவில்லை. 'கூட்டணி தொடரவில்லை, ஆதரவு தொடர்கிறது' என, அ.தி.மு.க., தெரிவித்தது.மக்கள் பிரதிநிதி என்ற, முறையில், என் தொகுதி மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்காகவும் குரல் கொடுப்பார்கள் என, நம்பித் தான், எம்.எல்.ஏ.,க்களாக மக்கள் தேர்வு செய்து அனுப்புகின்றனர்.சட்டசபையில், அரசு செயல்பாடுகளை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது. ஆளுங்கட்சி கொண்டு வரும் எந்த திட்டங்களையும், விமர்சனம் செய்யாமல், ஆலோசனை என்ற பெயரில் கூட கருத்து சொல்ல முடியாத நிலையை அ.தி.மு.க., உருவாக்கியது. சட்டசபையில் பேசவும் அனுமதிப்பதில்லை.

இப்போது தி.மு.க., கூட்டணியில் எப்படி உணர்கிறீர்கள்? 
வென்டிலேட்டர், ஜன்னல் இல்லாத, காற்று இல்லாத அறையில் இருந்ததை போன்று அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தேன். இப்போது, நான்கு பக்கம் ஜன்னல் திறந்த, காற்றோட்டமான அறையில் சுதந்திரமாக இருக்கிறேன்.

அடிக்கடி அணி மாறுவது, உங்கள் மீதான நம்பகத்தன்மையை இழக்க செய்யாதா? 
அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து, புதிய தமிழகம் வெளியேறியது, ஆதிதிராவிட மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 'சாதாரண காரணங்களுக்காக, கிருஷ்ணசாமி வெளியேற மாட்டார்' என, எண்ண வைத்துள்ளது.

புதிய தமிழகத்திற்கு, தமிழகத்தில் எந்தளவுக்கு ஓட்டு வங்கியுள்ளது? 
இருபது தொகுதிகளில், 60 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை ஓட்டுகள் உள்ளன. கூட்டணியிலிருந்து எங்களை போன்றவர்களை வெளியேற வைத்ததன் மூலம், வலது கரத்தை இழந்ததை போல ஜெ., உணருவார். இதன் விளைவு வரும் தேர்தலில் எதிரொலிக்கும்.

புதிய தமிழகத்திற்கு, எல்லா கிராமங்களிலும் முறையான அமைப்புகள் இல்லையே? 
மாநிலம் முழுவதும், பரவலாக தொண்டர்கள் உள்ளனர். கண்ணுக்கு புலப்பட மாட்டார்கள். 90 சதவீத கிராமங்களில் கிளைகள் உள்ளன.

திருமாவளவனுக்கு, இரண்டு தொகுதிகள், உங்களுக்கு, ஒன்று. வருத்தம் இல்லையா?

சந்தோஷமே. ஒருவர், இரு இட்லிகள் சாப்பிடுவார். மற்றொருவர், மூன்று இட்லிகள் சாப்பிடலாம். அவரவர் உடம்புக்கு ஏற்றவாறு சாப்பிட முடியும். எனவே ஒரு தொகுதி ஒதுக்கியதில், வருத்தப்பட ஒன்றுமில்லை.

ஒரே அணியில் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளதே? 
ஏற்கனவே மூப்பனார் தலைமையில், 1999ல், மூன்றாவது அணி அமைந்த போது, இரு கட்சிகளும் அதில் இடம் பெற்றன. 2004ல், மக்கள் கூட்டணி ஏற்பட்ட போதும், 2001 தேர்தலில், தி.மு.க., கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் காக்கும் விஷயத்தில் நானும், திருமாவளவனும், ஒத்த கருத்துள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் லட்சியம் ஒன்றே.

தேர்தலில் எதை முன்னிறுத்தி பிரசாரம் செய்வீர்கள்? 
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஜாதி மோதல்களால் தென்தமிழகத்தில் அமைதி குலைந்தது. நான் ஓட்டப்பிடாரத்தில் எம்.எல்.ஏ., ஆன பிறகு, தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த மோதல்களும் நடக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளேன். அமைதி காக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையை, மாநிலம் மட்டுமின்றி, நாடு முழுவதற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் லட்சியம்.

இத்தொகுதியில் வெற்றி பெற்றால், என்ன செய்வதாக உத்தேசம்? 
தென்காசி தொகுதி, இதுவரை, 14 லோக்சபா தேர்தல்களை சந்தித்துள்ளது. காங்., 9, த.மா.கா., 1, அ.தி.மு.க., 2, கம்யூ., 2 முறை வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் இந்த தொகுதி எந்த வளர்ச்சியையும் காணவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தண்ணீரில், 30 டி.எம்.சி., வீணாக அரபிக்கடலில் கலக்கிறது. பெரிய தொழிற்சாலைகள் இல்லை. ரயில்வே திட்டங்கள் பெரியளவில் இல்லை. செங்கோட்டை - புனலூர் அகல பாதை பணிகளில் மெத்தனம் நிலவுகிறது. இதற்காக லோக்சபாவில் என் குரல் வலுவாக ஒலிக்கும்.

உங்கள் கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் அதிருப்தியில் உள்ளாரா?
என்னால் அவரை திருப்திப்படுத்த இயலாது. அந்தளவு எனக்கு சக்தியில்லை. அவர் விலைக்கு வாங்கப்பட்டாரா, வழுக்கி விழுந்தாரா என, தெரியவில்லை. அவர் கட்சி உறுப்பினராக இருக்கிறார்.

எதற்காக அவர் உங்களிடமிருந்து சென்றார்? 
எதிர்க்கட்சி தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும், ஏழு தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதற்காக சென்றார்கள், அதே காரணம் தான்.

அழகிரி பிரச்னையால் ஏற்பட்ட சலசலப்பு தி.மு.க., மற்றும் கூட்டணியை பாதிக்குமா?
கருணாநிதி தலைமையில், ஸ்டாலின் ஒத்துழைப்புடன், மேல் மட்டம் முதல் கீழ்மட்டம் வரை முன் எப்போதும் இல்லாத அளவு தி.மு.க., கட்டுக்கோப்பாக இருப்பதாகவே கருதுகிறேன்; கூட்டணிக்கும் பாதிப்பில்லை.

தி.மு.க., கூட்டணியில் காங்., இடம் பெறாதது பலவீனமா? 
காங்., உட்பட எந்த கட்சியும் வராததால், தி.மு.க., கூட்டணிக்கு பலவீனம் இல்லை.

சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., கூட்டணி தொடருமா? 
லோக்சபா தேர்தலாக இருந்தாலும் கூட, எங்கள் பிரசாரம் சட்டசபை தேர்தல் பிரசாரமாகவும் இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக