எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 17 ஜூலை, 2015

'தி இந்து தமிழ்' நாளிதழ் இருட்டடிப்பு செய்த டாக்டர் . க . கிருஷ்ணசாமி M . D .M .L .A ., அவர்களின் .சிறப்புப் பேட்டி..


-1984 முதல் 1991 வரை நீங்கள் திமுககாரராகவே இருந்திருக்கிறீர்கள். தொடர்ந்து அங்கேயே இருந்திருந்தால் பட்டியல் சமுக மக்களுக்கு ஏதாவது செய்திருக்க முடியும் என்று கருதுகிறீர்களா?
திமுகவில் அதற்கான ஸ்பேஸ் எல்லாம் எப்போதோ போய்விட்டது. மாவட்ட அளவிலான தலைவர்கள் எல்லாம் சுய சாதிப்பற்றோடு இருந்து கொண்டு வெறுமனே அண்ணா, பெரியார், அம்பேத்கரின் பெயர்களைச் சொல்கிறார்கள். உண்மையிலேயே அவர்களது லட்சியங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவதில்லை. எனவே தான் இதில் நீடிக்க முடியாது என்று வெளியேறினேன்.
--உங்கள் கட்சி தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் செய்ததை பட்டியலிட முடியுமா?
நிற்கதியாக நின்ற பட்டியல் சமுக மக்களுக்கான தமிழகத்தில் உருவான முதல் அரசியல் கட்சி புதிய தமிழகம் தான். மக்களுக்கான பிரச்சினையை எடுக்கவே ஆளே இல்லாத நிலையில் அதை முன்னெடுத்தது நாங்கள் தான். ஆரம்பத்தில், தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை இருந்தது அதை முதன்முதலில் சட்டசபையில் பதிவு செய்தது புதிய தமிழகம் கட்சியே. இப்போது அது வெகுவாக குறைந்திருக்கிறது. ஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் பட்டியல் சமுக மக்கள் தாக்கப்படாத நாளே இல்லை என்ற நிலை இருந்தது. இன்றைக்கு அது எவ்வளவோ குறைந்திருக்கிறது. குரலற்றவர்களின் குரலாக புதிய தமிழகம் இருக்கிறது. இடஒதுக்கீடு இருந்து பல உரிமைகளை காப்பாற்றித் தருகிறது. ஆதிக்க மனப்பான்மையுடன் யார் செயல்பட்டாலும் அதைத் துணிவோடு எதிர்த்து நிற்கும் வல்லமையை எங்கள் மக்களுக்கு ஊட்டியிருக்கிறோம்.
--கட்சி ஆரம்பிக்கும் முன், நீங்கள் ஒரு எம்எல்ஏ. கட்சி ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகிய பிறகு கூடுதலாக ஒரு எம்எல்ஏ. இதுதான் உங்கள் வளர்ச்சியா?
முற்போக்கு சக்தி ஒரு வெற்றியை பதிவு செய்துவிட்டால், பிற்போக்கு சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்துகொள்வார்கள். ஓட்டப்பிடாரத்தில் நாங்கள் ஒரு வெற்றி பெற்றதும், மற்ற தொகுதிகளில் எல்லாம் பிற்போக்கு சக்திகளும், எம் மக்களுக்கு எதிரானவர்களும் ஒன்று சேர்ந்துவிட்டன. இதற்கு சில அரசியல்கட்சிகளும் உடந்தையாக இருக்கின்றன. பணத்திற்கு எளிதாக இரையாகக் கூடிய சிலரை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு தேர்தலிலும் எங்களுக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தார்கள். தேவேந்திரர் என்ற அடையாளத்துடன் போட்டி வேட்பாளர்களை நிறுத்துவது, எங்களைப் பற்றி அவதூறு பிரச்சாரம் செய்வது, நான் தேவேந்திர குலத்தானே இல்லை என்று வழக்குப் போடுவது என்று அவர்கள் செய்த சதிகளுக்கு அளவே கிடையாது. ஆனாலும், 99 சதவிகித தேவேந்திர குல மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். 2001ல் 10 தொகுதிகளில் போட்டியிட்டோம். வரும் தேர்தலில் எங்கள் வளர்ச்சி இன்னும் பிரகாசமாக இருக்கும்.உங்கள் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லையே? உங்களுக்கு அடுத்து என்று யாரை அடையாளம் காட்ட விரும்புகிறீர்கள்?
கொள்கை ரீதியாக சிலரை வளர்த்துவிடுவதில் ஆர்வம் காட்டுகிறேன். உரிய நேரத்தில் அவர்கள் அடையாளம் காட்டப்படுவார்கள்.
-ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள். இடையில் மக்களவைத் தேர்தல் வந்தபோது, நீங்களே வேட்பாளராக இறங்குகிறீர்கள். கட்சியில் வேறு யாரையும் நிறுத்தியிருக்க கூடாதா?
ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் தமிழகத்தில் 7 எம்பிக்கள் பட்டியல் இன சமுதாயத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லாம் தங்கள் கட்சியின் குரலாகத் தான் ஒலிக்கிறார்களே தவிர இந்த மக்களுக்கான கருத்தைப் பதிவு செய்வதில்லை. அங்கே பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. அங்கே வலுவான குரலாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே, நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து நான் முயற்சி செய்கிறேன். நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், சட்டமன்ற உறுப்பினராக வேறொருவரைத் தான் நிறுத்தியிருப்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக