தி இந்து தமிழ்' நாளிதழ் இருட்டடிப்பு செய்த டாக்டர் . க . கிருஷ்ணசாமி M . D .M .L .A ., அவர்களின் .சிறப்புப் பேட்டி..
புரட்சிகர மார்க்சிஸ்ட் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் நீங்கள். உங்கள் பொதுவுடமை பார்வை, இப்போது ஒரே ஒரு சாதிக்கான பார்வையாக சுருங்கிவிட்டதே?
முதலாளித்துவ நாடாக இருந்த ரஷ்யாவில், தொழிலாளர்களைத் திரட்டி புரட்சி செய்தார்கள். சீனாவில் நிலச்சுவந்தார்களுக்கு எதிராக விவசாயிகள் புரட்சி செய்தார்கள். ஆனால், இங்கே பண்ணையாளர்களுக்கு எதிராக விவசாயிகளை ஓரணியில் திரட்ட முடிந்ததா-? அதற்கு சாதி தடையாக இருக்கிறது. கீழவெண்மணியில் 1968ல் பண்ணையார்களுக்கு எதிராக அனைவருக்கும் தான் போராடினார்கள். ஆனால் கொளுத்தப்பட்டது தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் பறையர் சமுக மக்கள் மட்டும் தானே. மற்ற சமுதாய விவசாயிகள் எல்லாம் பண்ணையார்களுக்கு ஆதரவாகவும், அடியாட்களாகவும் ஆகிவிட்டார்களே? இந்த மண்ணில் மார்க்சியத்தை நேரடியாக செயல்படுத்த முடியாது. சாதிப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் வர்க்கமாக ஒன்றிணைய முடியாது. சர்க்கரை வியாதியுள்ள மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால், முதலில் சர்க்கரை வியாதியை குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஆபரேஷன் வெற்றியடையாது. அதை தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்யவில்லை. நாங்கள் செய்கிறோம். உண்மையான பொதுவுடமை இயக்கம் நாங்கள் தான்.மற்ற தலைவர்களாவது ஈழ அரசியல், தமிழ் ஆர்வலர் போன்ற சாயம் பூசிய சாதி அரசியல் செய்கிறார்கள். நீங்கள் அப்பட்டமான சாதித்தலைவராக தென்படுகிறீர்களே?
இது தவறான குற்றச்சாட்டு. அம்பேத்கர் மகர் என்ற ஒரு சாதியினரை வைத்துக் கொண்டு தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்காக அவர் மகர் சாதிக்கு மட்டுமான தலைவராகி விடுவாரா? நாட்டில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்திற்கு, அம்பேத்கருக்கு எப்படி மகர் மக்கள் பின்புலமாக இருந்தார்களோ அதைப்போலவே என்னுடைய போராட்டத்திற்கு தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் பின்புலமாக உள்ளார்கள். பிற சமுதாயத்திற்கும் சேர்த்து போராடுகிற போர் வீரர்களாகவே நாங்கள் அவர்களைக் கருதுகிறோம்.
-தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளருக்கும், தேவர் சமுதாயத்திற்கும் இடையே 1928ல் இருந்தே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை வைத்து அரசியல் செய்யும் நீங்கள், இதற்கான தீர்வை நோக்கி எப்போதாவது நகர்ந்திருக்கிறீர்களா?
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஆட்சியாளர்களின் கையில் தான் இருக்கிறது. ஒரு சாதிக்கு முன்னுரிமை தருவதையும் இன்னொரு சாதிக்கு பின் தள்ளுவதையும் ஆட்சியாளர்கள் முதலில் நிறுத்த வேண்டும். சிலை வைப்பது, பெயர் சூட்டுவது, தலைவர்களின் நினைவிடத்திற்குச் செல்வது போன்றவற்றில் காட்டுகிற வேறுபாட்டை நிறுத்த வேண்டும். அதன் மூலமாகத் தான் தென்மாவட்டங்களில் நடைபெறுகிற மோதல்களை நடத்து நிறுத்த முடியும். தேவேந்திர குல மக்கள் வேறு யார் மீதும் சாதி ரீதியான வெறுப்பை காட்டியதில்லை. அவர்கள் வேற்றுமைக்கும், வெறுப்புக்கும் ஆளானவர்கள். வெறுப்பை நீக்க வேண்டியவர்கள் எதிர்தரப்பினர் தான்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக