....................நெல்லை மாவட்டம், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியான மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தியதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி, இந்த கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போதைய த.மா.கா தலைவரான ஜி.கே மூப்பனார், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
ஆட்சியர் அலுவலகம் அருகில் பேரணி வந்தபோது காவல்துறையினருக்கும், தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டினர். அப்போது பேரணியில் வந்தவர்கள் தடியடிக்கு பயந்து அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு ஓடினர். ஆனால், போலீஸார் அங்கும் விரட்டியதால் ஆற்றுக்குள் குதித்தனர். இதில், நீச்சல் தெரியாதவர்கள் மற்றும் காவலர்கள் தடியடியில் காயமடைந்தவர்கள் 17 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
இப்படி உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 23ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை முதலாகவே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், சமுதாய அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய தேவேந்திரகுல கூட்டமைப்பு, தமிழ்ப்புலிகள், நாம் தமிழர், ஆதித்தமிழர் கட்சி, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பல்வேறு அமைப்புகளும் இதில் பங்கேற்றதால் ஒவ்வொரு அமைப்புகளுக்கும் தனித்தனியாக காவல்துறையினர் நேரம் ஒதுக்கினர். அதன்படி, தலைவர்கள் தங்களது தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மலரஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நெல்லையில் பல்வேறு சமுதாயப் பிரமுகர்களும் ஒரே சமயத்தில் குவிந்ததால் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக