எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

புதிய தமிழகம், மமக கட்சிகளுக்கு சின்னம் வழங்க சட்டப்படி நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு சின்னம் வழங்க சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் ‘கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின்போது ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட எங்கள் கட்சிக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.
2 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தற்போது நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். எனவே, இந்தத் தேர்தலிலும் எங்கள் கட்சிக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னி ஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தென்காசி தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி சட்டப்படி பரிசீலித்து முடிவு செய்வார்’’ என தெரிவித்தார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோல் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி அந்தக் கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
‘‘வேட்பு மனு தாக்கல் முடிவதற்கு முன்பாக மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கை பற்றி சட்டப்படி முடிவெடுக்கப்படும்’’ என்று தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக