எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 2 பிப்ரவரி, 2015

செண்பகவல்லி அணையைச் சீரமைக்க வலியுறுத்தியும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய தொகை விரைவாக வழங்கக்கோரியும் இம் மாதம் 15 ஆம் தேதி வாசுதேவநல்லூரில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்.

திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கட்டடங்கள், தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதற்கு நிவாரணத்தொகை மற்றும் விசாரணை கமிஷனை அமைப்பதோடு அரசு நடவடிக்கை நின்று கொள்வதும் தொடர்ந்து வருகிறது. வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க அரசு கொள்கைமுடிவுகளை வகுக்க வேண்டும். தேவைப்பட்டால் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.
தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் அவதியடைந்து வருகிறார்கள். அரசு நிர்ணயித்த விலையை கூட முறையாகவோ, சரியான காலத்திலோ கொடுக்காமல் தனியார் சர்க்கரை ஆலைகள் இழுத்தடிக்கிறார்கள். கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,500 தமிழக அரசு வழங்க வேண்டும்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி அணை கடந்த 40 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகள் வறட்சிக்கு ஆளாகியுள்ளன. ஆகவே, அந்த அணையைச் சீரமைக்க மத்தியஅரசு, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இதை வலியுறுத்தியும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய தொகைகளை விரைவாக வழங்கக்கோரியும் இம் மாதம் 15 ஆம் தேதி வாசுதேவநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இலங்கை அகதிகள் நாடு திரும்பது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எந்த ஒரு குடிமகனும் பிற நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வசித்தாலும், தங்களது சொந்த மண்ணில் பெற்ற முழுமையான உரிமையோடு வாழ்க்கையை நடத்த முடியாது. ஆகவே, விரும்பும் அகதிகள் அனைவரையும், இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு.
இந்தியாவின் பிற மாநில முதல்வர்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும்போது, நம் மாநிலத்தில் இருக்கின்ற தொழிற்சாலைகளும் மூடப்படும் அவலம் தொடர்கிறது. அரசு இயந்திரம் ஸ்தம்பித்துள்ளது. இதை மக்கள் கவனிப்பார்கள். அரசு இயந்திரம் செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக