எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 23 ஜூன், 2013

ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி



புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழக்குவதற்காக 76 சாதிகள் அடங்கிய பிரிவை எஸ்.சி.(பட்டியல் இனத்தவர்) என்று அம்பேத்கார் வகுத்துள்ளார். இந்தியா முழுவதும் இதுதான் நடைமுறையில் உள்ளது. 
ஆனால் தமிழகத்தில் எஸ்.சி. என்பதை பொதுவாக பட்டியல் இனத்தவர்கள் என்று மொழி மாற்றம் செய்யாமல் ஆதிதிராவிடர்கள் என்று அழைத்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் மத்திய பகுதி, தென் பகுதியில் அதிகம் வாழும் பள்ளர் இனத்தை சேர்ந்த மக்கள் தங்களை பொது பெயரான ஆதிதிராவிடர் என்ற பெயரில் அழைப்பதை விரும்பவில்லை. தங்கள் இனத்தின் பெயரான தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கவே விரும்புகின்றனர். 
இதற்காக பல்வேறு போராட்டம் நடத்தியும் தமிழகத்தில் ஆளுகின்ற அரசுகள் இதை நிறைவேற்றவே இல்லை. புதிய தமிழகம் கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். தற்போது தாலுகா அளவில் உண்ணாவிரதம் நடத்தி வருகிறோம். உடனடியாக தமிழக அரசு ஒட்டு மொத்தமாக ஆதிதிராவிடர் என அழைப்பதை கைவிட்டு தேவேந்திர குல வேளாளர் என அழைக்க உத்தரவிட வேண்டும். 
பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியருக்காக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அருந்ததியர் இன மக்கள் 3 சதவீதத்தில் மட்டும் இல்லாமல் மீதமுள்ள 15 சதவீத இட ஒதுக்கீட்டிலும் பங்கு பெறும் வகையில் தற்போது சட்ட திருத்தம் உள்ளது. 
இதனால் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான வேலைவாய்ப்பில் அருந்ததியர் இன மக்கள் முழு வேலைவாய்ப்பையும் பெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
தற்போது தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 25 ஆயிரத்திற்கும் மேல் காலியிடங்களை நிரப்ப உள்ளது. ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மொத்த காலியிடங்களில் எத்தனை சதவீதம் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்த இடங்களில் கண்டிப்பாக பட்டியல் இனத்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 
கல்வி உரிமை சட்டப்படி ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீதம் நலிந்த பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் இந்த முறையை எந்த கல்வி நிறுவனங்களும் பின்பற்றவில்லை. எனவே 25 சதவீத இடங்களை தொழில் கல்விகளில் அரசு ஒற்றை சாளர முறைப்படி நிரப்புவது போல் தமிழகம் முழுவதும் அரசே நிரப்ப வேண்டும். இந்த பிரச்சினைகள் குறித்து முழுமையாக சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்காததால் நான் வெளிநடப்பு செய்தேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக