எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 23 ஜூன், 2013

புதிய தமிழகமும் ஆதரவு: கனிமொழி வெற்றி உறுதி?


சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சி தலைவர்  டாக்டர் கிருஷ்ணசாமி, கருணாநிதியை இன்று பகல் 12 மணிக்கு நேரில் சந்தித்தார். சென்னை சிஐடி காலனியில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மாநிலங்களவை தேர்தலில் ஒரு உறுப்பினர் வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. திமுகவுக்கு 22 உறுப்பினர்கள் உள்ளனர். 2 உறுப்பினர்களை கொண்ட மனிதநேய மக்கள் மக்கள் கட்சி நேற்று தனது ஆதரவை திமுகவுக்கு வழங்குவதாக அறிவித்துவிட்டது.

எனவே 24 உறுப்பினர்களின் ஆதரவு  உறுதியான நிலையில், தற்போது  2 உறுப்பினர்களை கொண்ட புதிய தமிழகம் கட்சியும் கனிமொழிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதால் மொத்த ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 8 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை.

இந்நிலையில் 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் ஆதரவையும்,  3 உறுப்பினர்களை கொண்ட பாமகவின் ஆதரவையும் திமுக ஏற்கனவே கோரியுள்ளது.
இதில் எதிர்கால கூட்டணி கணக்குகளின் அடிப்படையில் திமுகவுக்கு தனது ஆதரவை காங்கிரஸ் நிச்சயம் அளிக்கும் என்றே டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. அதேப்போன்று திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளபோதிலும், திமுகவின் ஆதரவு வேறு எதற்காவது ( ஒருவேளை மீண்டும் கூட்டணி வைக்கலாம் என்று முடிவெடுத்தாலும்) பயன்படும் என்ற நோக்கத்திலும், 3 உறுப்பினர்களின் வாக்குகள் வீணாக வேண்டாம் என்ற எண்ணத்திலும் கனிமொழிக்கு ஆதரவாக பாமக ஆதரவளிக்கலாம் என தெரிகிறது. 

இதன் மூலம் கனிமொழியின் வெற்றி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.

ஆதரவு ஏன்? கிருஷ்ணசாமி விளக்கம் 
இதனிடையே கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, மாநிலங்களவை தேர்தலில் போட்ட்டியிடும் கனிமொழிக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தெரிவித்தார்.

மேலும் இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 4 பேருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி. ராஜாவுக்கும் போதுமான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால், புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்களின் 2 வாக்குகளும் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக, தாம் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக