தஞ்சாவூர்: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தருவதற்காக நாங்கள் திமுகவிடம் பணம் எதையும் வாங்கவில்லை. பணம் வாங்கிக் கொண்டு ஆதரவு தரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட அக்கட்சி பணத்தை இறக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில்தான் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த புதிய தமிழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவைத் தெரிவித்தன. இந்த நிலையில், திமுகவிடம் பணம் வாங்கவில்லை என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜ்யசபா தேர்தலில் அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 5 பேரும் வெற்றி பெறுவது உறுதி. இப்படிப்பட்ட நிலையில், நாங்கள் திமு. வேட்பாளரான கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார். மக்களின் வாக்குகளைப் பெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களானவர்கள் வாக்களிக்கக்கூடிய தேர்தல் இது. இதற்கும் மக்களவைத் தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. திமுகவை ஆதரிக்க பணம் வாங்கினேனா என்று கேட்கிறீர்கள், ரூ. 10 கோடி, ரூ. 20 கோடியை நான் பார்த்தது கிடையாது என்றார் கிருஷ்ணசாமி. இதற்கிடையே, புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் கிருஷ்ணசாமி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் அதிமுகக்கு ஆதரவு கொடுத்துவிட்டு இப்போது ராஜ்யசபா தேர்தலுக்கு திமுகவுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி கேட்கிறார்கள். அதே போல அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டனி தொடருமா என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு இந்த கூட்டனி அமைந்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அப்போது சந்தர்ப்பம் எப்படி உள்ளதோ அதன்படி கூட்டனி அமைப்போம் என்றார் அவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக