எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 20 டிசம்பர், 2016

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கும் முயற்சியைக் கைவிடுமாறு வேண்டுகோள்.

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கும் முயற்சியைக் கைவிடுமாறு வேண்டுகோள்.
வருவாய்த்துறை அமைச்சர்க்கு எழுதிய கடிதம்:
பொருள்:
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதி மாவட்டம் உருவாக்க அரசு அறிக்கை கேட்பது சம்மந்தமாக
22-10-2015 நாளிட்ட தமிழ் இந்து மற்றும் தினமலர் செய்தித் தாள்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதி மாவட்டம் உருவாக்க அறிக்கை கேட்கிறது அரசு என்ற செய்தியைப்படித்தேன். சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய வட்டங்களுக்கு இரயில் பாதை அமைக்கப்படவில்லை. சரியான குடிநீர் போக்குவரத்து, தொழில்வசதிகள் இல்லை. இதனால் கமுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலக சங்கம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அரசிடம் அனுப்பி உள்ளதாகவும் அதன் அடிப்படையில் கமுதி முதுகுளத்தூர், கடலாடி, பார்த்திபனூர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி ஆகிய வட்டங்களை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க வேண்டுமென ஒரு சங்கத்தினர் வேண்டுகோள் வைத்திருப்பதன் அடிப்படையில் வருவாய் துறை இணைச்செயலாளர் திரு.எழிலரசன் அவர்கள் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையருக்கு அறிக்கை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதே போன்று நிர்வாக வசதிகளை சுட்டிக் காட்டிய பல்வேறு பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அதன் காரணமாகவே அந்த மாவட்டங்களில் தொழில்கள் வளர்ந்து விடவில்லை. ஏற்கனவே திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு உட்பட பல மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல வருடங்களாக உள்ளன. தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படவேண்டும் என்று இன்று வரையிலும் தொடர் கோரிக்கைகள் இருந்து வருகின்றன. அக்கோரிக்கைகளை அரசு இதுவரையிலும் பரிசீலனைக்கு எடுத்ததுக் கொண்டதாகத் தெரியவில்லை. பல வருடங்களாக பொது மக்கள் மத்தியில் இருந்து வரும் பிற மாவட்டங்களை பிரிக்க கொள்கை ரீதியாக எம்முடிவும் எடுக்காமல்.பொது மக்கள் மத்தியில் இருந்து எந்த ஒரு வேண்டுகோளும் வராத நிலையில் ஒரே ஒரு மாவட்டத்தை மட்டும் பிரிப்பதற்கும் புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்குவதற்கும் அரசே அறிக்கை அனுப்புமாறு கோரியுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது இது முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் நான்கு சட்டமன்றத் தொகுதிகள மட்டும் உள்ளடக்கி 13 லட்சத்து 53 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய மாவட்டம் ஆகும். இப்பொழுது இருக்க கூடிய நிர்வாக அமைப்புகளை பயன்படுத்தியே குடிநீர் வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் உட்பட தொழில்கள் தொடங்குவதற்கு எந்த விதமான தடையும் இல்லை.மாநில அரசு, மத்திய அரசு, மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் மூலமாக குக்கிராமங்கள் வரை குடிநீர் வசதிகளையும்,சாலை வசதிகளையும் அடிப்படை கட்டுமான வசதிகளையும் உருவாக்குவதற்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதிகளை எந்த முறைகேடும் இல்லாமல் அந்தந்த பகுதிகளில் இருக்ககூடிய ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், தாலுக்கா அலுவலகங்கள் குடிநீர் வடிக்கால் வாரியம் போன்ற துறை அதிகாரிகள் மிகுந்த அக்கரையுடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட்டாலே போதும் மேலும் மத்திய அரசால் இந்திய முழுமைக்கும் சமமாக பிரித்து கொடுக்க கூடிய நிதியை கமுதி மற்றும் சுற்று உள்ளாட்சிகளுக்கான வட்டாரப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் முறையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உட்பட்ட பகுதிகளில் அரசினுடைய அனைத்து இலவச திட்டங்களையும் முறையாகக் கொண்டு சேர்க்காத வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதே அப்பகுதில் உள்ள தேக்க நிலையைப் போக்கும்.
அதை விடுத்து மாவட்டங்களையும் தாலுக்காக்களையும் துண்டாடுவதால் மட்டும் மக்களுக்கு எல்லா விதமான வசதிகளும் சென்றடைந்து விடும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. கமுதி, கடலாடி, முதுகளத்தூர் உள்ளிட்ட பகுதிகள் தொழில் ரீதியாக பின்னடைவதற்கும் வரலாற்று ரீதியாக உள்ள சமுகப் பின்னனிகளைக் கணக்கிலே கொள்ளாமல் பூகோளஅமைப்பை மட்டுமே கணக்கில் கொள்வது கண்னைக் கட்டிக் கொண்டு இருட்டில் நடப்பதற்கு சமமாகும். கமுதி,முதுகுளத்தூர்,கடலாடி பகுதிகள் நூறு வருடங்களுக்கு மேலாக சாதிய மோதல்களுக்கு இலக்காகி வரும் பகுதிகளாகும்.1928முதல் பல வருடங்கள் அப்பகுதில் வாழ கூடிய தேவேந்திரகுல வேளாளர்கள் ,ஆதி திராவிடர்கள் மற்றும் நாடார் இன மக்கள் மீது பல்வேறு விதமான சமுக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையும் அதை எதிர்த்து அப்பகுதியில் மிகப் பெரிய கிளர்ச்சிகள் நடந்ததையும் 1957-ம் ஆண்டு முதுகுளத்தூரில் மிக பெரிய கலவரம் நடந்ததையும் அதன் தொடர்ச்சியாக இன்னும் அடிக்கடி சமுதாய மோதல்களும் அதை ஒட்டி கலவரங்கள் நடந்து வருவதையும் நாடு அறியும்.
ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்படும் பல சமுதாய மக்கள் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், நரிக்குடி போன்ற பகுதிகளில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு சுதந்திரமாக சென்று வரமுடிவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் கமுதியை தலையிடமாக கொண்டு முதுகுளத்தூர், கடலாடி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய தாலுக்காக்களை இணைத்து மாவட்டம் அமைக்கப்படுமேயானால் அது பலதரப்பட்ட மக்களின் நடமாட்டத்திற்கான இடமாக இருக்காது. மாறாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் சாதி மாவட்டமாகவே செயல்படும். ஏற்கனவே கமுதி,முதுகுளத்தூர் ,கடலாடி பகுதிகளில் இந்திய சட்டத்திற்கு கட்டுப்படாத ஒரு குறிப்பிட்ட பிரிவனர் மத்தியில் நாடுகள் செயல்பட்டு வருவதையும். அந்த “சாதி நாட்டு அமைப்புகாளால் தான் தேவேந்திரகுல வேளாளர்கள் ,ஆதிதிராவிடர்கள் ,அருந்ததியர் ,நாடார் ,யாதவர் உட்பட்ட எண்ணற்ற பிற சமுதாய மக்களுடைய வாழ்வுரிமை நசுக்கப்படுகிறது என்பதையும் நாடறியும்.
ஜனநாயக நாட்டில் அரசினுடைய அமைப்புகள் அனைத்து மக்களுக்கு ஆனதாக மட்டுமின்றி அனைத்து மக்களுமே எளிதில் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அது அனைத்து தரப்பினருடைய வளர்ச்சிக்கும் வலு சேர்ப்பதாக இருக்க வேண்டும். ஆனால் கமுதியை மையமாக கொண்டு மாவட்டம் அமையுமேயானால். அந்தப் பகுதியில் ஏற்கனவே மிகவும் வலுவாகவும், ஆதிக்கமும் செலுத்தி வரும் கொண்டைய நாட்டு மறவர்கள் என்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வலுவானவர்களாக மாற்றும் முயற்சியாகவே இது முடியும். மேற்குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர மற்ற இன மக்கள் அங்கு சுதந்திரமாக சென்று வர இயலாத நிலைமையும் அதனால் தங்களது உரிமைகளை இழந்து அல்லது அதை விட்டு இடம் பெயரும் சூழ்நிலையும் உருவாகும்.
13.5 லட்சம் மக்கள் வாழும் ஒரு மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களுடைய கருத்தைக் கேட்காமல் நூறு அல்லது இருநூறு பேர் கொண்ட ஒரு அரசு ஊழியருடைய அமைப்பின் தீர்மானத்தை அரசு எவ்வாறு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது என்றுதெரியவில்லை.உள்ளாட்சிபிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்களின் எண்ணற்ற அமைப்புகள் எதுவுமே இது போன்ற ஒரு விபரீதமான கோரிக்கையை வைத்ததாகத் தெரியவில்லை. எனவே தமிழ்நாடு அரசு எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினுடைய வேண்டுகோள் அல்லது ஆதிக்கத்திற்கு இசைந்து போகாமல் ஒட்டு மொத்த மக்களுடைய நலன் கருதி கமுதியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கும் முயற்சியைக் கைவிடுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக