எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 28 டிசம்பர், 2016

புதிய தமிழகம் போராளிகள் திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு வீரவணக்கம்!

புதிய தமிழகம் போராளிகள் திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு வீரவணக்கம்!
அக்டோபர் – 6: புதிய தமிழகம் கட்சியின் புரட்சிகரமிக்க போராட்ட வரலாற்றின் துவக்கப்புள்ளி என்று கூறலாம். அதுமட்டுமல்ல தென்மாவட்ட தேவேந்திர மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கறுப்பு நாளும் கூட. 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் எனும் கிராமத்தில் அன்றைய தமிழ்நாடு அரசின் காவல்துறை என்கிற பெயரில் செயல்பட்ட கள்ளர்துறை குற்றவாளிகளைத் தேடுகிறோம் என்கிற பெயரில் ஒட்டுமொத்த கிராமத்தையே சூறையாடிய நிகழ்வு நடந்தேறியது. பொதுமக்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் காவல் அளிப்பதற்காக பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் வழங்கி உருவாக்கப்பட்ட காவல்துறை, கள்ளர்துறையாக உருவெடுத்து கொடியன்குளம் கிராம மக்களின் வீடுகளை சூறையாடி, வீடுகளிலிருந்த பணம், பொருள், நகைகளையெல்லாம் களவாடி கொள்ளையடித்துச் சென்ற அந்த நிகழ்வு தமிழக அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு மட்டுமல்ல அழிக்கமுடியாத அவமானமுமாகும். அதோடுமட்டுமல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் கிணற்றில் மலத்தை அள்ளிக் கலந்த மிகக்கேவலமான, அருவருக்கத்தக்க, அசிங்கப்படத்தக்க, காரி உமிழத்தக்க சம்பவங்களும் தமிழக காவல்துறையால் அரங்கேற்றப்பட்டன. நேருக்கு நேர் நின்று எதிர்க்கத் துணிவில்லாத கோழைகள் மானமிழந்து, சுயமரியாதையிழந்து அரசு இயந்திரத்திற்கு அடிமையாக, அடிவருடியாக செயல்பட்டு அரசு அதிகாரத்தை துணைக்கழைத்து கொள்ளையடித்த கொடியன்குளம் வன்முறை எனும் இந்த காவல்துறை அத்துமீறலைக் கண்டித்தும், சி.பி.ஜ. விசாரணைக் கோரியும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையிலமைந்த அன்றைய தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பாக 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் நாள் சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. தாய்மார்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான போராளிகள் திரண்ட அந்த பிரமிக்கத்தக்க பேரணி சென்னையை அதிரவைத்ததோடு மட்டுமல்லாமல் தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தது. கூட்டமைப்புத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடந்த அந்த பேரணியில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் ஒன்று திரண்டதோடு, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர்.இராமதாஸ், ஆவடி சுந்தர்ராஜன், ஆகியோர் பங்கேற்றனர். ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் திரண்டிருந்ததை சீரணித்துக்கொள்ளமுடியாத தமிழக அரசு அன்றைய காலகட்டத்தில் சென்னையில் பிரபல ரவுடியாக வலம்வந்த அயோத்திக்குப்பம் வீரமணி மூலம் கூட்டத்தினர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. இதற்காகவே காத்துக்கொண்டிருந்த தமிழக கள்ளர்துறை வழக்கம்போல் தங்களது துப்பாக்கிச் சூடு எனும் அரசபயங்கரவாதத்தை அரங்கேற்றியது. முன்பு சொன்னதுபோல ஆண்டாண்டு காலமாக நேருக்கு நேர் நின்று எதிர்க்கத் துணிவில்லாத கோழைகள் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி நிகழ்த்திய அந்த மெரினா துப்பாக்கிச்சூட்டில் திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகிய இரண்டு போராளிகள் வீரமரணமடைந்தனர். பல தோழர்கள் படுகாயமடைந்தனர். இந்த அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து அனைத்துக்கட்சித் தலைவர்களும் ஆளுங்கட்சிக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகிய இரண்டு போராளிகளின் உயிர்த்தியாகத்துக்கு முன்னால் ஒட்டுமொத்த அரசு இயந்திரமே தோற்றுப்போனது. கோழைகளால் ஏவிவிடப்பட்ட அரசின் அடக்குமுறையை தோற்கடித்து, புதிய தமிழகம் போராளிகளின் புரட்சிகர போர்க்குணமிக்க போராட்ட வரலாற்றை திலகமிட்டு துவக்கிவைத்த திரிசூலம் சிவஞானம், சுப்பிரமணியம் ஆகிய இரண்டு போராளிகளின் உயிர்த்தியாகத்தை இந்த நாளில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும் நம்முடைய புரட்சிகர வீரவணக்கத்தை செலுத்திக்கொள்வோம்.
எழுவோம் எழுவோம் விழவிழ எழுவோம்!
விழவிழ எழுவோம்! வீறுகொண்டு எழுவோம்!!
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும்வரை எழுந்து கொண்டேயிருப்போம்!!!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக