எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 18 நவம்பர், 2014

தமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்து வருகிறது: கிருஷ்ணசாமி


புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது,   ‘’தமிழகத்தில் தற்போது சாதிக்கலவரங்கள் அதிகரிக்கத்தொடங்கி உள்ளன. கடந்த 2012ல் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் பரமக்குடியில் 7 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். கடந்த ஆண்டு தர்மபுரியில் இருவேறு சமூகத்தினரின் காதல் திருமணத்தையொட்டி, கலவரம் நடந்தது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இது பரவி வருகிறது.

குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களில் 66 கொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகள் அனைத்தும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பயிற்சி பெற்ற கூலிப்படையினர் மூலமாகவே நடத்தப்படுகிறது. இவர்களுக்கு போலீஸ்காரர்களின் துணை உள்ளது. அரசியல் சூழ்ச்சி, வஞ்சகங்களாலேயே இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன.

இந்த கொலைகள் அனைத்தும் அற்ப காரணங்களுக்காகவே செய்யப்பட்டு உள்ளன. உசிலம்பட்டி, ராமநாதபுரம் பகுதிகளில் கவுரவ கொலைகள் நடந்து உள்ளன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளேன். இதுதொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவோம்.

கடந்த ஓராண்டாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார். கவுரவ கொலைகள், சாதி கலவரங்களை கண்டிக்கும் வகையில் அனைத்து தாழ்த்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நெல்லையில் வருகிற 22–ந்தேதி அன்று ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த உள்ளோம்’’என்று கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக