ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா
அதிமுகவிலும் சரி, ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா நந்தியாக மாறி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தபோதும் பொறுமையாக இருந்த ஜெயலலிதா, சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கியதும், சீர்குலைவு நடவடிக்கைகளை முடுக்கி விட்டதாலும்தான் பொறுக்க முடியாமல் சசிகலா கும்பலை அதிமுகவை விட்டு தூக்கி விட்டதாக கூறப்படுகிறது.
1991ம் ஆண்டுக்கு முன்பு போக வேண்டும் ஜெயலலிதா, சசிகலா இடையிலான நட்பை அறிந்து கொள்ள. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்தபோது அவருக்கு சாதாரண முறையில்தான் அறிமுகமானார் சசிகலா.
ஆணாதிக்கம் மிக்க அரசியல் துறையில், உற்ற தோழியாக சசிகலா வந்ததாலும், தன்னைப் புரிந்து கொண்டு நடந்ததாலும் சசிகலாவை தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. சசிகலாவும், ஜெயலலிதாவின் மனதறிந்து அவருக்கு உற்ற தோழியாக நடந்து கொண்டார். இந்த நட்பு நாளுக்கு நாள் இறுகி இணை பிரியாத தோழிகளாக ஜெயலலிதாவும், சசிகலாவும் மாறிப் போயினர். நாளடைவில் ஜெயலலிதாவின் உதவியாளராக உருவெடுத்தார் சசிகலா. மேலும் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது அறிவுரை கூறும் அளவுக்கும் அவர் மாறினார்.
1991ம் ஆண்டுதான் சசிகலாவின் விஸ்வரூபம் வெளிப்பட்டது. ஆட்சியிலும், கட்சியிலும் சசிகலா ஒரு முக்கிய அதிகார மையமாக உருவெடுத்தார். 91 முதல் 96 வரை நடந்த முதலாவது ஜெயலலிதா ஆட்சியின்போது சசிகலாவைத் தாண்டித்தான் காற்றாக இருந்தாலும் கூட ஜெயலலிதாவை சென்றடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
சர்வ வல்லமை படைத்த அதிகார மையமாக மாறிய சசிகலா படிப்படியாக தனது குடும்பத்தினரையும் ஒவ்வொருவராக கட்சிக்குள் இழுத்து வந்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்காக தனது கணவர் நடராஜனைக் கூட உதறித் தள்ளத் துணிந்தார். பல ஆண்டுகளாகி விட்டது சசிகலாவும் நடராஜனும் பிரிந்து (இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்திப்பதுண்டு என்ற தகவலும் உண்டு).
ஜெயலலிதாவின் வலது கரமாகவும், இடதுகரமாகவும் மாறிப் போனதால் சசிகலா வைத்ததே சட்டம் என்ற நிலை கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் உண்டாகி விட்டது.
சசிகலாவின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அவரது அக்காள் மகன்களான சுதாகரன், திவாகரன், பாஸ்கரன் ஆகியோர் அதிமுகவில் தலை தூக்கினர். உறவினர்களான அக்காள் கணவர் விவேகானந்தன்,டாக்டர் வெங்கடேஷ், ராவணன் உள்ளிட்டோரும் அதிகார மையங்களாகினர்.
அதிமுகவில் ஏதாவது நடக்க வேண்டும் என்றால் இவர்களில் யாரையாவது ஒருவரைப் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு அதிமுகவினர் தள்ளப்பட்டனர். இந்த மன்னார்குடி வகையறாவின் ஆதிக்கத்தால், ஆளுமையால் பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு ஒதுங்கிச் சென்றனர், பலர் தூக்கியடிக்கப்பட்னர் – முத்துசாமி போல.
தற்போதைய கதைக்கு வருவோம். ஜெயலலிதாவின் 3வது ஆட்சி தொடங்கிய கடந்த 6 மாதங்களில் சசிகலாவின் ஆதிக்கமும், ஆட்டமும் கட்சிக்குள் அதிகரித்து விட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. மேலும் ஆட்சியிலும் அவர் பெருமளவில் தலையிடுகிறார் என்ற புகார்களும் கிளம்பின.
தனக்கு வேண்டியவர்களை முக்கியப் பதவிகளில் அமர்த்தினார் சசிகலா. அதேபோல அமைச்சர்கள் நியமனத்திலும் அவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. இடமாறுதல்கள் உள்ளிட்டவற்றிலும் பெரிய அளவில் விளையாடினார் சசி என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
இந்த குழப்பத்தால்தான் ஜெயலலிதாவின் இந்த ஆறு மாத கால ஆட்சியில் பல அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைச் செயலாளர்கள், பல அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு ஆட்சிக்கும், கட்சிக்கும் பெரும் கெட்ட பெயர் ஏற்படுத்த காரணமாகி விட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக உளவுத்துறை ஐஜியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் நியமனமும், இடமாற்றமும் ஒரு முக்கிய உதாரணமாக கூறப்படுகிறது. இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர். இதனால்தான் அந்தப் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவரது செயல்பாடுகள் ஜெயலலிதாவுக்குப் பிடிக்காததால் அதிரடியாக அந்தப் பதவியிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா. இது சசிகலாவுக்கு முதல் ஷாக் என்கிறார்கள்.
உளவுத்துறை தகவல்களை தன்னிடம் நேரடியாக கொடுக்காமல் சசிகலாவிடம் போய் பொன் மாணிக்கவேல் தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், இதனால்தான் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, பொன் மாணிக்கவேலை தூக்கினார் என்றும் கூறுகிறார்கள்.
அதேபோல நடராஜனுக்கு மிகவும் நெருக்கமானவரான ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தையும் அதிரடியாக, அவருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து தூக்கி 2வது ஷாக்கைக் கொடுத்தார் ஜெயலலிதா.
இப்படி அடுத்தடுத்து சசிகலாவுக்கு ஆப்பு வைத்தார் ஜெயலலிதா. இதன் பிறகாவது அவர் ஆட்சியில் தலையிடுவதை நிறுத்துவார் என்பதுதான் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு.
ஆனால் ஜெயலலிதாவே எதிர்பாராத வகையில் சசிகலா தரப்பின் சதிச் செயல்கள் இருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை வைத்து ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவது, பின்னர் தங்களுக்குச் சாதகமாக எம்.எல்.ஏக்களை வளைத்து கட்சியைக் கைப்பற்றுவது என்ற திட்டமும் தீட்டப்பட்டதாக ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் வழக்கம் போல ஜெயலலிதாவின் விசுவாசி ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்கள் பதவிக்கு வந்து விடாமல் தடுத்து நடராஜனை முதல்வராக்கும் மிகப் பெரிய திட்டமும் சசிகலா தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்திற்குப் போனதால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்தே சசிகலாவை நீக்கும் அதிரடி முடிவுக்கு அவர் வந்ததாக கூறுகிறார்கள்.
இதை விட இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.
டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசுகிறார்கள்.
நந்தி போல சசிகலா உட்கார்ந்து கொண்டு இருந்ததால் ஜெயலலிதாவின் நிழலைக் கூட அணுக முடியாமல் இருந்த அதிமுகவினரும், தலைவர்களும், விசுவாசிகளும் சசிகலாவின் நீக்கச் செய்தியால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இனிமேலாவது முதல்வரை நேரில் பார்க்க முடியும், அதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
இருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
எனவே இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக