எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 1 டிசம்பர், 2011

வெள்ள நிவாரண நிதியில் பல கோடி முறைகேடு - டாக்டர் கிருஷ்ணசாமி

 





தூத்துக்குடி டிச.1-
புதிய தமிழகம் கட்சியின் தலைவரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் க.கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த செப்டம்பர் மாதம் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி  டிசம்பர் ஆறாம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் முதற்கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து இருந்தோம். தமிழக முதல்வர் பரமக்குடியில் பலியான குடும்பத்திற்கு கூடுதலாக நான்கு லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலையும் அறிவித்து உள்ளார்கள். எனினும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளையும், இறந்த நாளையும் அரசு விழாவாக  அறிவிக்க வேண்டும், பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும்,  அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை  ரத்து செய்ய வேண்டும், ஆதிதிராவிட நலத்துறை என்பதை பட்டியலினத்துறை எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பன போன்ற பிற கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் ஆறாம் தேதி நடக்கும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து நாளை, நாளை மறுநாள் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்

.
அண்மையில் பெய்த மழையினால் தமிழக அளவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் பகுதில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழையினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் பழுதான சாலைகள், பல பாலங்கள், குளங்கள் சேதமடைந்தன. இதற்கு மத்திய அரசை எதிர்பார்க்காமல் அரசு தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் மழை வெள்ளத்தால் அதிகளவு சேதம் அடைந்துள்ளது. இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துள்ளேன். வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்கு தமிழக அரசு ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு முதற்கட்டமாக நூறு கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அத்திமரப்பட்டி கிராமத்தில் வைரமணி என்ற சிறுவன் மழை நேரத்தில் மின்சாரம் தாக்கி இறந்துள்ளான். மாப்பிளையூரணி கிராமத்தில் பாலமுருகன் என்ற இளைஞர் குளத்தில் மூழ்கி இறந்துள்ளார். ஜாகீர் உசேன் காலனியில் சம்சுராஜாஉசேன் என்ற பன்னிரண்டு வயது சிறுவன் ஓடையில் மூழ்கி இறந்துள்ளான். தருவைக்குளத்தில் மீன் பிடிக்க சென்ற அந்தோணி ஜெயக்குமார் சென்ற மீனவரை கடந்த மாதம் இருபதாம் தேதி முதல் காணவில்லை. இவரது உயிர்க்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம். எனவே பாதிக்கப்பட்ட இந்த நான்கு குடும்பங்களுக்கும் தலா இரண்டு இலட்சம் தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.


மீனவர்கள் காணாமல் போவது தமிழகத்தில் அடிக்கடி நடைபெற்று வருகின்றது. கடலோர காவல் படை விரைந்து செயல்படாமல் உள்ளது. எனவே தமிழக அரசு மீனவர்களை தேடும் பணிக்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்க வேண்டும். முழுமையாக கடலோர காவல்படையை மட்டும் நம்பி இருக்காமல் காணாமல் போகும் மீனவர்களை கண்டு பிடிக்க தமிழக மீன்வளத்துறை மூலம் அனைத்து உபகரணங்களும் அரசு தயாராக வைத்திருக்க வேண்டும்.



ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் வெள்ள சேதம் ஏற்படும் பொழுது தற்காலிக நிவாரணப் பணிகள், நிரந்தர நிவாரணப் பணிகள் என்ற பெயரில் நடைபெற்ற வேளைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. கடந்த 2010-2011ம் ஆண்டுகளில் கோரம்பள்ளம் பகுதிகளில் மட்டும் ஒரு கோடியே இருபத்தி ஒன்பது இலட்சம் ரூபாய்க்கு 63 வேலைகள் நடைபெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதில் பல கோடி முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. எந்த வேலையும் முறையாக நடைபெறவில்லை.  


மாவட்ட ஊராட்சியின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2006 முதல் 2011 வரை தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் வேலைகள் நடைபெற்றதாக பல கோடிகள் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.  மாவட்ட ஊராட்சி நிதியில் செலவிடப்பட்ட தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தனியாக விசாரணை கமிசன் அமைக்க வேண்டும். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு குறித்து தேசி அளவில் பொது விவாதம் நடத்தப் பட வேண்டும். தமிழ்நாட்டில் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, உயர்த்தப்பட உள்ள மின் கட்டணம் இவையெல்லாம் ஏற்புடையதல்ல. கடந்த கால ஆட்சியை குறை சொல்லலி விலையேற்றத்தை நியாயப்படுத்தக் கூடாது. மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. விலைவாசி உயர்விற்கு எதிராக ஒத்த கருத்துடைய  அமைப்புகள், அரசியைக் கட்சிகளோடு இணைந்து போராடுவோம்" என்று டாக்டர். க. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தனது பேட்டியில் கூறினார்.  அப்போது மாவட்ட செயலாளர் வக்கீல்.கனகராஜ், மாவட்ட பொறுப்பாளர் கருப்பசாமி, ஓட்டபிடாரம் ஒன்றிய செயலாளர் பாபு, தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் பெருமாள், மாநகர செயலாளர் கனகராஜ், தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர் மகாராஜன், புதூர் பாண்டியாப்ரோம் ஊராட்சி மன்றத் தலைவர் முனியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக