சென்னை, இந்தியா: “தி.மு.க.வுக்கு மறுபடியும் வாழ்வு கொடுக்க ஜெயலலிதா மறைமுகமாக உதவி செய்கிறாரோ என்று சந்தேகமாக உள்ளது” என்று கூறியிருக்கிறார், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. “இதற்காக ‘எங்கோ ஒரு இடத்தில்’ சமரசம் செய்யப்பட்டுள்ளது போலவும் தெரிகின்றது” என அடுத்த அஸ்திரத்தையும் வீசுகின்றார் அவர்.
“கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காகவே அ.தி.மு.க. முழுமூச்சாக நின்றது. தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற அதே நோக்கத்துடனே, நாமும் அவர்களுடன் (அ.தி.மு.க.வுடன்) கூட்டணி அமைத்துக் கொண்டோம். தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டது.
இன்று கூட்டணியில் காங்கிரஸ் துணைகூட இல்லாமல், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு நிற்கிறது. தி.மு.க.வை இனி எழ முடியாதபடி முற்றாக வீழ்த்துவதற்கு இதை விட சரியான தருணம் கிடைக்கவே கிடைக்காது. சட்ட மன்றத் தேர்தலில் அ.தி.மு.க. யாருடைய உதவியை நாடியதோ, அதே கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் உள்ளாட்சித் தேர்தல்களையும் சந்தித்திருந்தால், எந்த இடத்திலும் தி.மு.க. டெபாசிட் வாங்கக்கூட முடியாது.
ஆனால், ஜெயலலிதா அப்படிச் செய்யவில்லை. தனது கூட்டணியிலுள்ள கட்சிகளை வெளியே அனுப்பி, கூட்டணியைப் பலவீனம் ஆக்கியிருக்கிறார். தன் இமாலயத் தவறுகளால் தி.மு.க-வுக்கு மறுபடியும் வாழ்வு கொடுக்கிறார்.
இவர் தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்கிறாரோ என்றுகூட சந்தேகமாக இருக்கிறது. ஏதோ ஒரு விஷயம் அவரை மிரட்டுகிறது. எதற்காகவோ ஜெயலலிதா பின்வாங்குகிறார். ‘ஏதோ ஒன்று’ நடைபெற்றுவிடும் என்று அச்சப்படுகிறார் என்றுகூட நினைக்கிறேன்” என்றும் கூறுகிறார், டாக்டர் கிருஷ்ணசாமி.
இவரது கடந்தகாலம், மற்றும் இவரது கட்சியின் பழைய செயற்பாடுகள் எல்லாவற்றையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சியாக இருந்துகொண்டும், அ.தி.மு.க.வின் செயற்பாடுகளை விமர்சித்த ஒரேயொரு நபர் இவர்தான்.
உள்ளாட்சித் தேர்தலில் சீட்களைப் பெறுவதற்காக, விஜயகாந்தின் தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட்கள் உட்பட, கூட்டணிக் கட்சிகள் அசட்டுச் சிரிப்புடன் அடக்கி வாசித்து கொண்டிருந்தபோது, ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட மூவரைக் காப்பாற்ற வேண்டும் என்று சட்டசபையில் முதலில் குரல் கொடுத்தவரும் இவர்தான். பரமக்குடி கலவரம் பற்றி ஆளும் கட்சிக்கு எதிராகக் குரல்கொடுத்த ஒரேயொரு கூட்டணிக் கட்சித் தலைவரும் இவர்தான்.
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தபோது, அதில் முதலில் இணைந்து கொண்டதே இவரது புதிய தமிழகம் கட்சிதான்.
ஜெயித்து சட்டமன்றம் சென்றபின், ராஜிவ் கொலை வழக்கு, பரமக்குடி கலவரம் ஆகியவற்றை சட்டமன்றத்தில் கிளப்பியதன் மூலம், முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்தை முதலில் சம்பாதித்த கூட்டணிக் கட்சித் தலைவரும் இவர்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக