எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

''ஜெ. வருந்தவும் இல்லை, திருந்தவும் இல்லை!' டாக்டர் கிருஷ்ணசாமி'

''ஜெ. வருந்தவும் இல்லை, திருந்தவும் இல்லை!' டாக்டர் கிருஷ்ணசாமி'
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் முதல் கட்சியாக நுழைந்தது, புதிய தமிழகம். மூன்று தமிழர் உயிர்காப்பு, பரமக்குடி கலவரம் ஆகியவற்றை சட்டமன்றத்தில் கிளப்பியதன் மூலம் ஜெயலலிதாவின் கோபத்தை முதலில் பெற்றவரும் இவர்தான். இப்போது, கூட்டணி நிலவரம் களேபரம் ஆகியிருக்க... புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் பேசினோம். ''அ.தி.மு.க. தலைமை, கூட்டணிக் கட்சிகளை மிக மோசமாக அவமதித்து​விட்டது என்று எதிர் அணியினரே ஆதங்கப்​படுகிறார்களே?'' ''தி.மு.க-வைப் போலவே ஆட்சியைப் பிடிப்பதற்காக, அ.தி.மு.க-வும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு மெகா கூட்டணியை அமைத்தது. மரபுப்படி, அதே அணிதான் உள்ளாட்சித் தேர்தல், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் தொடர வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள்கூட முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி, உதாசீனப்படுத்தி உள்ளது, அ.தி.மு.க. தலைமை. வழக்கமாக, கூட்டணியின் அங்கமாக இருக்கும் கட்சிகள்தான், ஆளும் கட்சியின் குறைகள், கருத்து வேறுபாடுகளால் அணியில் இருந்து விலகும். இதுவரை தமிழக அரசியலில் கூட்டணித் தலைமையே மற்ற கட்சிகளை ஒதுக்கித் தள்ளியது இல்லை. ஜெயலலிதா இப்போது அதையும் செய்துகாட்டி இருக்கிறார். இது, கூட்டணி தர்மத்தை அப்பட்டமாக மீறுவதாகும்!'' ''ஜெயலலிதா இப்படி நடந்துகொள்ள என்ன காரணம்?'' ''கடந்த தி.மு.க. ஆட்சியின் மொத்தத் தவறுகளுக்காகவும் அந்தக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டது. இன்று காங்கிரஸ் துணைகூட இல்லாமல், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு நிற்கிறது. அதை முற்றாக வீழ்த்துவதற்கு இதுவே சரியான தருணம். சட்டமன்றக் கூட்டணியே இப்போதும் தொடரும் பட்சத்தில் உள்ளாட்சித் தேர்தலில் எந்த இடத்திலும் தி.மு.க. டெபாசிட் வாங்கக்கூட முடியாது. ஆனால், ஜெயலலிதா தன் இமாலயத் தவறுகளால் தி.மு.க-வுக்கு மறுபடியும் வாழ்வு கொடுக்கிறார். மறைமுகமாக உதவி செய்கிறாரோ என்றுகூட சந்தேகமாக இருக்கிறது. எங்கோ ஓர் இடத்தில் எதற்காகவோ சமரசம் நடக்கிறது. எதற்காகவோ ஜெயலலிதா பின்வாங்குகிறார், அச்சப்படுகிறார் என்றுகூட நினைக்கிறேன். ஜெயலலிதாவின் முதல் (1991)ஆட்சிக் காலத்தில் அவரை வேறு யாரோ இயக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. 2001-ல் ஆட்சிக்கு வந்தபோது அவரிடம் சிறிது மாற்றம் ஏற்பட்டது போல இருந்தது. ஆனால், இந்த ஆட்சியைப் பார்க்கும்போது, ஜெ. சுயமாக செயல்படவில்லை; பின்னால் இருந்துகொண்டு அவரை யாரோ இயக்குகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.'' ''பரமக்குடி சம்பவத்தில் முதல்வரின் தவறு என்ன என்று நினைக்கிறீர்கள்..?'' ''பொதுவாக, ஜெயலலிதா ஆட்சியில் எல்லாக் காலகட்டங்களிலும் ஒடுக்கப்பட்டோர் மீது அத்துமீறல்கள் நடந்துள்ளன. வாச்சாத்தியில் வெறியாட்டம், சிதம்பரம் பத்மினி, சின்னாம்பதியில் பழங்குடியினர், கொடியங்குளம் வன்முறை எனப் பல சம்பவங்களைச் சொல்ல முடியும். காலம் அவரிடம் மாற்றத்தை உருவாக்கும் என நம்பினோம். ஆனால், ஜெயலலிதாவிடம் எந்த மாற்றமும் உருவாகவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சி போக வேண்டும்; நல்ல ஆட்சி வர வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தார்கள். போலீஸ் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக அல்ல. 'யாருக்கும் கட்டுப்படாமல் காவல் துறை தன்னிச்சையாகச் செயல்படவேண்டும்' என்று முதலமைச்சரே பேசுகிறார். அரசியல் சாசனத்தில் எந்த ஓர் அரசுத் துறைக்கும் இப்படி ஒரு சிறப்பு உரிமை இல்லை. பரமக்குடியில் அன்று நடந்தது என்ன? போலீஸ் டி.ஐ.ஜி-யே பொதுமக்களின் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அவர் செய்தது, முழுக்க முழுக்க கிரிமினல் குற்றம். எளிய மக்கள் அதுவும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்றால் போலீஸார் ஏளனமாகத்தான் நடத்துவார்கள். இதில், முதலமைச்சரே போலீஸுக்கு ஊக்கம் கொடுத்துப் பேசினார். இது அவர்களுக்கு மேலும் தைரியத்தைக் கொடுத்துத் தறிகெட்டு நடந்துகொள்ளும் அளவுக்குப் போயிருக்கிறது. பரமக்குடியில் மக்கள் மறியல் செய்தார்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அதை போலீஸ் எப்படிக் கையாளவேண்டும் என்ற சட்டரீதியான ஒரு நடைமுறையைக்கூட அன்று பின்பற்றவில்லையே! நீயா... நானா என ரவுடித்தனமாக, நிரபராதிகளான தேவேந்திர குல மக்களை துப்பாக்கியால் சுட்டு ஏழு உயிர்களைப் பறித்திருக்கிறது போலீஸ். சென்னையில் துணை ஆணையராக இருக்கும் செந்தில்வேலனை பரமக்குடிக்கு அனுப்பிவைத்தது யார்? அவரும் டி.ஐ.ஜி.சந்தீப் மிட்டலும் சம்பவத்தன்று சென்னையில் யாரிடம் பேசினார்கள்? குறிப்பிட்ட டி.ஐ.ஜி-க்கும் தி.மு.க-வின் தென் மண்டலப் பொறுப்​பாளருக்கும் நெருக்கம் என்று சொல்லப்​படுகிறதே? இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டும். நாங்கள் இதை எளிதாக விட்டுவிட மாட்டோம். ஜெயலலிதாவின் ஒவ்வொரு ஆட்சியிலும் தாழ்த்தப்​பட்ட மக்களை அச்சமூட்டி பீதியூட்டுவதையே வழக்கமாக்கி​விட்டார்கள். ஜெயலலிதாவைப் பொறுத்த வரை, தன் தவறுகளுக்காக அவர் வருந்துவதாகவும் இல்லை, திருந்துவதாகவும் தெரியவில்லை. அ.தி.மு.க. அணியில் நாங்கள் சேர்ந்ததன் மூலம் தென் தமிழகத்தில் நல்ல நம்பிக்கை உருவானது. அதை ஒரே நாளில் ஜெயலலிதா நொறுக்கிவிட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகும் பாதிக்கப்பட்டவர்களை அ.தி.மு.க. சார்பில் சந்தித்து ஆறுதல் சொல்லக்கூட அவருக்கு மனம் இல்லை. அவர்களின் தலித் விரோதப் போக்கும் மனிதநேயம் இன்மையும்தான் இதில் அப்பட்டமாகத் தெரிகிறது!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக