மது விலக்கு: சட்டமன்றத்தைக் கூட்ட டாக்டர் கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் வலியுறுத்தல்................................விருதுநகர்: மது விலக்கு பிரச்னை தொடர்பாக உடனடியாக சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில், விருதுநகர் தேசபந்து மைதானத்தில், பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் மதுப்போதை காரணமாக இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். எனவே மது, மக்கள் பிரச்னையாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக பல்வேறு கட்சியினர், மாணவர்கள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது.
எனவே மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து கட்சியினரிடமும் அரசு விவாதிக்க வேண்டும் " என்றார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “ மதுவுக்கு எதிராக மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுவதை வரவேற்கிறேன். அதே நேரம் சில இடங்களில் காவல்துறைக்கும், மாணவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் ரோட்டில் வந்து மதுவுக்கு எதிராக போராடுவதை கை விட்டு, ஒவ்வொரு ஊர்களிலும் வீதி வீதியாக சென்று, மதுவுக்கு எதிராக பொது மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
வருகிற சட்டசபை தேர்தலில் மது பிரச்னை முக்கியமான பிரச்னையாக மக்கள் மன்றத்தில் முன் வைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மதுவுக்கு எதிராக எந்த கட்சி குரல் கொடுத்தாலும், புதிய தமிழகம் அதை ஆதரிக்கும். பூரண மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பாக எல்லா கட்சிகளும் இணைந்து செயல்பட்டால், அதை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல முடியும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக