......................................வரலாற்றில் கரும்புள்ளியாக இருக்கும் தீண்டாமைக்கு முடிவு கட்டும் போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு கம்யூனிஸ்ட் இயக்கமும் இணைந்து போராட வேண்டும் எனவும், அதற்கு புதிய தமிழகம் உறுதுணையாக நிற்கும் என டாக்டர் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
விருதுநகரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2-வது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர்.கே.கிருஷ்ணசாமி பங்கேற்று பேசியதாவது:
தீண்டாமை முன்னணி இயக்கம் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக செயல்பட்டு வருகிறது. இம்மண்ணில் தீண்டாமையை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். இம்மண்ணில் தீண்டாமையை வேரோடு பிடுங்கி எறியும் லட்சிய பணியை மேற்கொள்வதில் புதிய தமிழகம் என்றும் உறுதுணையாக நிற்போம்.
இதில், பங்கேற்பதை சம்பிராயத்திற்காக இல்லாமல், சமுதாயத்தின் கடமையாக கருதி கலந்து கொண்டுள்ளேன். இதேபோல், தேசிய, மாநில அரசியல் கட்சியினர், ஜாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்து போராடுவார்களா என்றால் இல்லை. ஆனால், எங்கும் இல்லாத அளவில், அதிக கௌரவக்கொலைகள் நடைபெறுகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசினால், ஆதாரம் உள்ளதா என்கிறார்கள். அதிலும், தென்மாவட்டங்களில் தீண்டாமை அதிகமாக உள்ளது.
இதுவரையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த 105 பேர் வரையில் கௌரவ கொலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் முற்போக்கு பேசுவோம், ஆனால் ஜாதி மட்டும் இருக்க வேண்டும் என்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதில், 22 சதவீதம் கிராமங்களில் தீண்டாமையால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு எதிராக நாங்கள் 1998ல் அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டோம். சட்டப்பேரவையில் இரட்டை குவளை முறை உண்மை பதிவு செய்யப்பட்டது. தீண்டாமையின் மையப்பகுதியாக விருதுநகர் மாவட்டம் திகழ்கிறது. கொட்டகாச்சியேந்தல் கிராமத்தில் 10 ஆண்டுகளாக மனுத்தாக்கல் செய்யவிடாமல் அரசியல் அமைப்புக்கு எதிராக தடுத்ததை யாரும் மறக்க முடியாது.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் 25 சதவீதம் பேர் உள்ள நிலையில், தீண்டாமையை ஒழிக்க கடுமையாக வன்கொடுமைச் சட்டத்தை அமுலாக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சட்டம் குறித்து மைய, மாநில அரசு தாழ்த்தப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறது. அதை எந்த அரசும் செய்வதில்லை. எனவே வரலாற்றில் கரும்புள்ளியாக இருக்கும் தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தோடு, கம்யூனிஸ்ட் இயக்கமும் இணைந்து போராட வேண்டும் எனவும், அதற்கு உறுதுணையாக புதிய தமிழகம் நிற்போம் என அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக