எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 29 மே, 2015

'ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்!'

கோவை: ஜெயலலிதா பதவி இழந்த தொகுதியை அறிவிக்க காலதாமதம் செய்த தேர்தல் ஆணையம், ஆர். கே நகர் தொகுதி இடைத் தேர்தலை உடனே அறிவித்து ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், "தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலமாக எதையும் சாதிக்க முடியாது என்ற தி.மு.க.வின் முடிவு ஒரு பக்கம் மிகச்சரியானது. அதே சூழலில் தி.மு.க. வும், மற்ற எதிர்கட்சிகளும் போட்டியிடாதபோது ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தி, அவருக்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தரலாம். இந்த யோசனை முற்றாக தள்ளிவைக்க கூடியது அல்ல. இது தொடர்பாக யோசிக்கலாம். தேர்தலில் ஒரே கட்சிக்கான வாய்ப்பை எளிதாக கொடுக்க கூடாது. ஜனநாயக ரீதியிலான வாய்ப்பு குறித்து சிந்திக்கலாம். 

அது தொடர்பாக விவாதிக்க புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளார்கள் கூட்டம் நாளை சென்னை யில் நடக்கிறது. பொது வேட்பாளரை நிறுத்துவது அல்லது முற்றாக அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பது குறித்து முடிவு செய்வோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆர்.கே.நகரில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஒரு வாரத்துக்கு முன்னர் தான் ராஜி னாமா செய்கிறார். உடனடியாக தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவிக்கிறது. அதற்குள் எப்படி தேர்தலுக்கு கட்சிகள் தயாராக முடியும்? இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால் அதை விடுத்து எதிர்கட்சிகளை முடக்கி, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது எப்படி சரியாக இருக்க முடியும்?“ என்றார்.

“ஜெயலலிதா பதவி இழந்த போது, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தேர்தல் குறித்து ஏன் அறிவிக்கவில்லை என கேட்டபோது மவுனம் சாதித்த தேர்தல் ஆணையம், இப்போது ஆர்.கே.நகரில் கண் மூடி திறப்பதற்குள் தேர்தலை அறிவிப்பது ஏன்? அண்மையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் வழக்கத்துக்கு மாறாக தேர்ச்சி விகிதாச்சாரம் மட்டுமல்லாது, முதல் மூன்று இடங்களை பிடித்தவர் களின் எண்ணிக்கை, அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

குறிப்பாக அறிவியிலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் ஒன்றரை லட்சத்துக்க்கும் அதிகம். தமிழகத் தின் கல்வி நிலையை எடுத்துக்காட்டும் வகையில் இந்த முடிவுகள் இல்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் எங்கும் இத்தனை மாணவர்கள் அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றதாக எந்த புள்ளிவிவரமும் இல்லை. இதில் கல்வித்துறையின் விளையாட்டு அதிகம் அடங்கியிருக்கிறது. எதையோ மறைக்க இதை செய்துள்ளார்கள் என தோன்றுகிறது. 

தமிழகத்தில் இருந்து இந்திய அளவில் நடக்கும் பல பொதுத்தேர்வுகளில் பெரிய அளவு வெற்றி பெற வில்லை. நம்மை நாமாக ஏமாற்றுபவையாக இது இருக்கும். எதிர்காலத்தில் மாணவர்களின் ஒட்டுமொத்த திறனை குறைக்க இந்த முறை வழிவகுத்து விடும். எனவே உண்மை நிலையை கண்டறிய பொது அமைப்பை கொண்டு விசாரித்து, மறுமதிப்பீடு செய்ய வேண்டும். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள், கணக்கில் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது என்பதை சட்ட வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டிய பிறகும்கூட இன்னும் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்ய தயங்குகிறது. தனது தார்மீக கடமையை நிறைவேற்ற வேண்டிய அரசு மேல்முறையீடு செய்ய தயங்குவது ஜனநாயகத்துக்கு இழைக்கப்படும் குந்தகம் ஆகும். 

நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை போக்க கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். தேவையில்லாமல் காலம் தாமதிப்பது பல்வேறு வகையிலான யூகங்களுக்கு வழிவகுக்கும். ஜெயலலிதா நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பின் அடிப்படையில் பதவி இழந்தார். அதை அரசிதழில் வெளியிடவும், தேர்தல் ஆணையத்தில் அறிவிக்கவும் பல மாதம் எடுத்துக்கொண்டது தமிழக அரசு. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் உடனே தேர்தல் தேதி அறிவிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக