எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 11 மார்ச், 2015

பொதிகை ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

ராஜபாளையத்திற்கு வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆலங்குளம் சிமெண்டு ஆலையை நவீனப்படுத்த கோரி புதிய தமிழகம் உள்ளிட்ட பிற கட்சிகள் போராடியதை தொடர்ந்து ஆலை இயக்கப்பட்டு வருகிறது. சிமெண்டு ஆலைக்கு ரூ. 195 கோடியை வரும் பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் வரை கட்சியினர், போராட்டக்குழுவினர் உட்பட பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அ.தி.மு.க, தி.மு.க. அரசுகளால் தென் தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்குவதற்காக, மதுரை முதல் தூத்துக்குடி வரை உள்ள நான்கு வழிச்சாலையின் இருபுறமும் தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு செயல்வடிவத்திற்கு வரவில்லை. வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவிப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
திருமங்கலம் முதல் தென்காசி வரை நான்கு வழிச்சாலை அமைக்க கோரியும், ஆலங்குளம் வழியாக நெல்லை வரை நான்கு வழிச்சாலை அமைக்க கோரியும், விழுப்புரம் முதல் குமரி வரை அகல ரெயில்பாதையும், இரு வழிப்பாதையும், சரக்கு ரெயில்பாதையும் வேண்டும் என்பது தொடர் வேண்டுகோள். தமிழகத்தில் பல்வேறு பகுதியில் அகல ரெயில்பாதை திட்டங்கள் முடங்கி உள்ளன. கோவையிலிருந்து திண்டுக்கல், கோவையிலிருந்து கரூர் வழியாக திருச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்க வேண்டும். இருவழி இருப்பு பாதைகள் வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெறும்.
முதற்கட்டமாக வருகிற 14–ந்தேதி கோவையில் ஆர்ப்பாட்டமும், இரண்டாவதாக திருமங்கலத்தில் இருந்து குற்றாலம் வரை நான்கு வழிப்பாதை, குமரி வரையில் இருவழி இரும்பு பாதை கேட்டு வரும் ஏப்ரல் 3வது வாரம் ராஜபாளையத்தை மையமாக வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
செங்கோட்டையில் இருந்து சென்னை வரை செல்லும் பொதிகை ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். கூடுதலாக பகல் நேர ரெயிலை ரெயில்வே நிர்வாகம் இயக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக