எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 2 மார்ச், 2015

மணல் கொள்ளையே கொலைகளுக்கு காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு...


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடந்த தொடர் கொலைகளுக்குக் காரணமான மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
புதிய தமிழகம் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் நகரச் செயலர் பாஸ்கரன் கடந்த பிப்.22ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக, கிருஷ்ணசாமி ஸ்ரீவைகுண்டம் வரத் திட்டமிட்டார்.
ஆனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம், அவர் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவைகுண்டம் செல்லலாம் என அனுமதி அளித்தது.
அதன்படி, காலை 11.40 மணிக்கு கிருஷ்ணசாமி ஸ்ரீவைகுண்டம் வந்தார்.
பின்னர், பிச்சனார்தோப்பில் உள்ள பாஸ்கரனின் வீட்டுக்குச் சென்ற அவர், பாஸ்கரனின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது:
மணல் கொள்ளையர்களால்தான் இப்பகுதியில் அதிகமான கொலைகள் நடக்கின்றன. கால்வாய், மூலக்கரை, பக்கப்பட்டி ஆகிய கிராமங்களில் நடந்த கொலைகளை அடுத்து தற்போது பாஸ்கரன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைகள், மனித உரிமை மீறல்களை தனி புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாகப் புகார் வந்துள்ளது என்றார். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணசாமி புறப்பட்டு சென்றார்.
போலீஸ் குவிப்பு: கிருஷ்ணசாமி வருகையையொட்டி, தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங், டி.ஐ.ஜி. சுமித்சரண் ஆகியோர் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், அப்பகுதியில் சென்ற வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக