எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 13 மார்ச், 2015

கொம்பன்' திரைப்படத்துக்கு திடீர் எதிர்ப்பு: மறுதணிக்கை செய்ய வலியுறுத்தல்...

கொம்பன்' திரைப்படத்துக்கு திடீர் எதிர்ப்பு: மறுதணிக்கை செய்ய வலியுறுத்தல்...திரைப்படங்கள் வெறும் பொழுபோக்கு என்ற நிலையைத் தாண்டி மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வைப் பாதிக்கும் மிகப்பெரும் நிறுவனங்களாக மாறிவிட்டன. அதுவும் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் தமிழருடைய கலாச்சார வாழ்வு, பண்பாடுகள், அரசியல் நிலைப்பாட்டையே மாற்றி அமைக்கும் அளவுக்கு உருவெடுத்துவிட்டன. பலருடைய அரசியல் வாழ்க்கைக்கும் சமூக அறிமுகத்துக்கும் திரைப்படங்களையே மிகப்பெரிய கருவிகளாக பயன்படுத்தி வருகிறதை தாங்கள் அறிவீர்கள். சமூக அந்தஸ்து, பண்பாடுகள், அரசியல் வளர்ச்சி ஆகியவற்றைத் தூக்கி நிறுத்திக்கொள்ள திரைப்படங்களே பெரிதும் பயன்படுவதால் அதனால் ஏற்படும் சமூக தாக்கங்கள், இருவேறு குழுக்களிடையே ஏற்படும் மோதலுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றைத் தடுப்பது குறித்து சமூக அக்கறையோடு விரைவில் வெளிவர உள்ள கொம்பன் திரைப்படம் குறித்து தங்களுடைய கவனத்திற்கு கொண்டுவந்து தீர்வுகாண விரும்புகிறேன்.

ஞானவேல்ராஜன் என்பவரது தயாரிப்பில் முத்தையா என்பவரால் இயக்கப்பட்டு நடிகர் கார்த்திக் மற்றும் லட்சுமிமேனன் நடித்து வெளிவர உள்ள கொம்பன் திரைப்படம் இன்று உள்ள நிலையிலேயே வெளிவருமாயின் தென்தமிழகத்தில் மிகப்பெரிய சாதிமோதலுக்கு வித்திடும். கொம்பன் என்ற பெயரே வன்முறையாளனை போற்றிப் புகழும் ஒரு சொற்றொடர். அது நல்ல பண்பட்ட மனிதர்களைக் குறிக்கும் சொல் அல்ல. இத்திரைப்படத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஆப்பநாட்டு கிராமத்தை மையமாக வைத்தே முக்கிய கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆப்பநாடு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் முக்குலத்தோரில் ஒரு பிரிவினரான மறவர்கள், தங்களை ஆப்பநாட்டு மறவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதுண்டு.

1918-ல் இருந்தே அப்பகுதி மறவர்கள் பிற தமிழ்சாதி மக்களான தேவேந்திரகுல வேளாளர்கள், ஆதி திராவிடர்கள் (பறையர்கள்) மற்றும் நாடார்கள் மீது கடும் கட்டுப்பாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் ஏவிவிட்டவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு. இதற்கு எட்டுக்கட்டளை என்றும் பதினொறு கட்டளை என்றும் பெயருண்டு. இந்தக் கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடி எண்ணற்ற தேவேந்திரகுல வேளாளர்கள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்; எண்ணிலடங்கா உடைமைகளை இழந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக 1957 செப்டம்பர் 11 அன்று தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னணியிலேயே பெரிய அளவில் முதுகுளத்தூர் கலவரம் வெடித்தது. 1978 முதல் 1980 வரையிலும் தொடர்ச்சியாக ஆப்பநாடு மறவர்களுக்கும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் தொடர் மோதல்கள் ஏற்பட்டன. 1982, 1989, 1993, 1995, 1997, 2001 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் தொடர் கலவரங்கள் மற்றும் 2011-ல் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தேவேந்திரகுல வேளாளர்கள் மரணமெய்தினார்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ஆம் நாள் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் 30-ஆம் நாள் இன்னொரு தலைவரின் நினைவு தினம் ஆகிய நாட்களில் மேற்குறிப்பிட்ட இரு பிரிவினருக்கிடையே மோதல்கள் நிலவி வருவதை நாடே அறியும்.

அப்பகுதியில் சிறு சாதிப்பொறி கூட பெருங்காட்டுத் தீயாக மாறும் என்பது கடந்தகால வரலாறு. கொம்பன் திரைப்படம் முழுக்க முழுக்க இராமநாதபுரம் மற்றும் ஆப்பநாடு மறவர்களை தூக்கிப் பிடிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக தெரிகிறது. கதாநாயகன் மேற்குறிப்பிட்ட சமுதாயத்தை பிரதிபலிப்பவராகவும், அவரின் எதிரிகளாக சித்தரிக்கப்படக்கூடியவர்கள் தேவேந்திரகுல சமூகத்தைச் சார்ந்தவர்கள் என அடையாளப்படுத்தும் விதமாக வில்லனுடைய கை மணிக்கட்டில் சிவப்பு பச்சை கயிறு கட்டப்பட்டிருக்கிறது. மேலும் 'இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்களை எதிர்க்க எவன்டா இருக்கான்?' என்பது போன்ற வசங்களும் இடம்பெற்றிருப்பது அப்பட்டமான சாதிய தூக்கல் ஆகும். சிவப்பு பச்சை வண்ணம் தென்தமிழகத்தில் திரளாக வாழக்கூடிய தேவேந்திரகுல வேளாளர்களை அடையாளப்படுத்தும் வண்ணம் ஆகும். மேலும் புதிய தமிழகம் கட்சிக் கொடி மேலே சிவப்பும் கீழே பச்சையும் கொண்டதாகும். மேலும் கதாநாயகனின் உறவுகளைக் காண்பிக்கின்ற போது கர்ணகொடூரமான உருவங்களை உருவகப்படுத்தி இருக்கிறார்கள். சுருக்கத்தில் இத்திரைப்படம் எந்தவிதமான கலைநயத்தோடும் பொழுதுபோக்கு அம்சங்களோடும் தயாரிக்கப்படவில்லை. மாறாக வன்முறையின் மூலமாக ஒரு சமுதாயத்திற்கு மேலாண்மைக் கொடுத்து, சாதி ரீதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தூக்கியும் பிற பிரிவினரை தாழ்த்தும் விதமாகவும், இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு மாறாகவும், திரைப்படங்கள் போன்ற வலிமைவாய்ந்த கலாச்சார நிறுவங்களின் நோக்கத்திற்கு எதிராகவும் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இத்திரைப்படத்தின் பெயரும் அதில் அடங்கியுள்ள வசனங்களும் காட்சிகளும் ஏற்கெனவே எதிரும் புதிருமாக உள்ள இரு சமுதாய மக்களிடையே இராமநாதபுரம் மற்றும் தமிழ்நாடெங்கும் மோதல்களைத் தோற்றுவிக்கும். எனவே மொத்தத்தில் கொம்பன் என்ற திரைப்பட பெயரே வீண் வம்பை விலைக்கு வாங்கும்; ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஒற்றுமையையும் சீர்குலைக்கும். எனவே ஆட்சேபகரமான கொம்பன் என்ற திரைப்படத்தின் பெயருக்கும், ஒரு குறிப்பிட்ட சாதி தூக்கலுக்கான வசனங்களுக்கும், மித மிஞ்சிய வன்முறைக் காட்சிகளுக்கும், சாதி ரீதியான அடையாளங்களுக்கும் தணிக்கைக் குழு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்துகிறேன். ஒருவேளை தணிக்கைக் குழுவின் பார்வையிலிருந்து தப்பியிருப்பின் மறுதணிக்கை செய்யப்படவேண்டும். அதுவரை இப்படத்தை திரையிடக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக