எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 14 ஜூலை, 2012

கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தூத்துக்குடி, ஜூலை.12-

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தூத்துக்குடி வந்தார். அப்போது புதியதமிழகம் கட்சி தலைவரும், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. வுமான டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் செய்யப்படவில்லை என்றும், வீட்டுமனைபட்டா,குடிநீர், முதியோர் உதவித்தொகை தொடர்பாக கொடுக்கப்பட்ட 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

இதையடுத்து அந்த பிரச்சினை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். அதன்பிறகு அமைச்சரை முற்றுகையிட்டிருந்த பொது மக்கள் கலைந்துசென்றனர். கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக