"இலங்கை தமிழ் ஈழப்பிரச்சனையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A., அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தின் ஜீவநதிகளாக இருந்த வைகை, பாலாறு, தென்பெண்ணை வறண்டு போனது. காவிரி, தாமிரபரணி போன்ற நதிகள் நீர் ஆதரமின்றி பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் நீர்நிலைகள் சுருங்கி வருகின்ற காரணத்தால் விவசாயம் குறைந்து வருகின்றது. அடுத்த பத்தாண்டுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
வட மாநிலங்களான உ.பி, மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் பெரிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஆவதும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு கங்கை காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் வடக்கிலிருந்து கங்கை காவிரியை இணைக்க பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதால் சிறுசிறு நதிகளை இணைத்து கங்கை காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
'தென்மாவட்டங்களின் நீர் ஆதாரத்தைப் பெருக்குவதற்கு காவிரி, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, குண்டாறு மற்றும் வைகை ஆறுகளை இணைத்தும், வைப்பாறு மற்றும் மலட்டாறு போன்றவைகளை இணைப்பதன் மூலமும் தென் தமிழகம் நீர் ஆதரங்களில் மேம்பட்டு விவசாயிகள் பயன்பெறுவர்' என்பதை நேற்று தமிழக முதல்வரைச் சந்திக்கும் போது வலியுறுத்தினேன்.
நிலம், நீர், காற்று மாசுபடாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்காரணமாக உலக வெப்பமயமாதலால் நிலத்தடி நீர் வறண்டு போகின்றது. நிலங்கள் அனைத்தும் தொழிற்மயமாகின்ற காரணத்தால் அதிலிருந்து வெளிவரும் புகை, வாயு காரணமாக காற்று மாசுபடாமல் தடுக்கும் பொருட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆகஸ்டு 15ம் தேதி புதியதமிழகம் மற்றும் பிறந்தமண் அறக்கட்டளையின் சார்பாக தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றிய அளவில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்படும்.
இலங்கை இனப்பிரச்சனை என்பது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை ஆகும். அண்மையில் தெற்கு சூடான் இன அடிப்படையில் தனி நாடானது. இதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது போல இலங்கை தமிழர் பிரச்சனையிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியாகும் சானல்4 தொலைக்காட்சி செய்தியை அடிப்படையாக வைத்து அமெரிக்கா இலங்கைமீது பொருளாதார தடை விதித்தது. அமெரிக்கா தனது தோழமை நாடுகளையும் இலங்கைமீது பொருளாதார தடை விதிக்க கேட்டுக்கொள்ள வேண்டும். பொதுவாக்கெடுப்புக்கு முன்பாக ராஜபக்சே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டிக்க ஐநா மற்றும் உலக நாடுகளை அமெரிக்கா வலியுத்த வேண்டும்.
10,000 மைல்களுக்கு அப்பால் உள்ள இங்கிலாந்து நாடு இலங்கை தமிழர் பிரச்சனையில் இரக்கம் காட்டுகிறது. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. ஆனால் இந்திய அரசு மட்டும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது. இலங்கை ராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிப்பதும், தளவாடங்கள் கொடுப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல; இது கண்டனத்துக்கு உரியதும் ஆகும்.
2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களிடம் பறிக்கப்பட்ட விவசாய நிலங்களை இந்த அரசு மீட்டெடுப்பது பாராட்டுக்குறியது. எனினும் பன்னாட்டு நிறுவனங்களால் போலிப்பத்திரம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது. மேலமருதூர், சில்லாங்குளம், இளவேலங்கால், தருவைக்குளம் போன்ற ஊர்களில் போலிப்பத்திரம் மூலம் இந்து பாரத், ஈஸ்ட் கோஸ்ட் எனர்ஜி நிறுவனங்களின் மூலம் விவசாய நிலங்கள் இந்து கோவில்கள், மயானங்கள், குளங்கள், நடைபாதைகள் போன்றவற்றை அபகரித்து வைத்துள்ளனர். இதைபற்றி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்." என்று அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநிலஅமைப்புச்செயலாளர் வே.க.அய்யர், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு ஆ.ராமசாமி அவர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் கிறிஸ்டோபர், மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மதுரம், ஆகியோர் உடனிருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக