இலங்கையில் ஈழத் தமிழினத்திற்கு எதிராக சிறிலங்கா இனவெறி அரசு தனது முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்திய இனப்படுகொலைப் போரில் கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது அந்தச் செய்திகளைக் கேட்டு உலகமே அலறித் துடித்தது, எதிர்க்குரல் கொடுத்தது. ஆனால் இந்திய அரசைப் போல் இந்திய ஊடங்கங்களும் மெளனம் காத்தன.
இந்தியாவின் தொலைக்காட்சிகள், குறிப்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் கொழும்புச் செய்தியாளர்கள் அனைவரும் சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் உதய நாணயக்கார என்ன சொல்கிறாரோ அதுதான் உண்மை, அதைத்தாண்டி சொல்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல், அதையே செய்தியாக்கி இந்தியர்களுக்குத் தந்தன.
இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கிற தமிழர்களின் உறவுகள் இலங்கைத் தீவில் கொல்லப்பட்டது இந்தியத் தமிழர்களுக்கு மட்டும்தான் வலித்ததே தவிர, இதர இந்தியர்களுக்கு வலிக்கவில்லை.
விரல் விட்டு எண்ணத்தக்க அளவிற்குக் கூட இந்தியாவின் எந்த ஒரு ஊடகமும் - இணையத்திலிருந்து தொலைக்காட்சி, நாளிதழ்கள் வரை - அங்கே நடந்த இனப் படுகொலை குறித்துப் பேசவில்லை. சில மனிதாபிமானிகளோடு அத்துயரம் நின்றுவிட்டது.
பொதுவாக உலகெங்கிலும் வாழும் இதழாளர்கள் அனைவரும் - அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - உண்மையை வெளிக்கொணர்வதில் ஓரினமாக செயலாற்றி வந்துள்ளார்கள்.
ஆனால் இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டபோது இந்தியாவின் இதழினம் அந்த உண்மையை சற்றும் கண்டுகொள்ளவில்லை.
அது இந்திய அரசும், இலங்கை அரசும், அதோடு சேர்ந்த சில நாடுகளும் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிட்ட 'பயங்கவாதத்திற்கு எதிரான போர்' என்கிற சொற்றொடரில் மயங்கி வேடிக்கை பார்த்தது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஊடகங்களும், அமெரிக்க, அவுஸ்திரேலிய ஊடகங்களும் அலறின. இலங்கையில் கூட தமிழினத்திற்கு எதிராக ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்தை எதிர்த்து பல சிங்கள இதழாளர்கள் கொந்தளித்து எழுந்தனர்.
ஈழத் தமிழின இதழாளர்களான தாரகி என்கிற தர்மரத்தினம் சிவராம், ஐயாத்துரை நடேசன், சுடர் ஒளியின் சுப்பிரமணியன் சுகிர்தராசன், யாழ் தினக்குரலின் மரியதாஸ் மனோஜ்ராஜ் ஆகியோருடன் லசந்த விக்கிரமசிங்க, இக்னலிகொட வரை பல சிங்கள இதழாளர்கள் சிங்கள இராணுவத்தின் ஆதரவுடன் செயல்பட்ட ஒட்டுக்குழுக்களாலும், கூலிப்படையினராலும் நேரடியாகவும் கடத்தியும் கொல்லப்பட்டுள்ளனர்.
இக்னலிகொட தமிழினத்தை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பற்றிய விசாரணையில் ஈடுபட்டிருந்தார் என்பதற்காகவே அவர் கடத்தப்பட்டார் என்று அவருடைய மனைவி கதறுகிறார். 500 நாட்கள் ஆகியும் அவர் என்ன ஆனர் என்று தெரியவில்லை.
எனவே ஈழத் தமிழினத்திற்கு எதிரான அடக்குமுறையையும், இனப் படுகொலைப் போரையும் இலங்கையின் இதழாளர்கள் பலரும் கண்டித்து எழுதி வந்தனர். இன்றுவரை அவர்களில் பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆனால், தமிழ்நாட்டைத் தாண்டி ஒரிரு இதழாளர்கள் தவிர, வேறு எவரும் தமிழினத்திற்கு எதிரான சிங்கள இனவெறி அரச பயங்கரவாதத்தைப் பற்றி பேசவில்லை, எழுதவில்லை, தொலைக்காட்சிகளில் காட்டவில்லை! இதனை இன்றைக்கு சொல்லக் காரணம் உள்ளது.
இதுநாள்வரை ஈழத்தில் நடந்த மனித குலத்திற்கு எதிரான அநீதிகளை தமிழினத்தவரும், ஐரோப்பியர்களும் மட்டுமே உரக்கக் கூறிவந்தனர். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரில் என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பாகவும், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்தும் விரிவான அறிக்கை கொடுத்த பிறகும் இந்தியாவின் ஊடங்கள், ஊடகவியலாளர்களின் போக்கு மாறவில்லை!
ஊடகங்களை மத்திய காங்கிரஸ் அரசு கட்டுப்படுத்துகிறது, இந்தியாவின் முதன்மை ஊடகங்கள் அனைத்தும் பெரு நிறுவனங்களின் ஒரு கிளையாக இருக்கின்றன என்றெல்லாம் கூறப்படுவது பெருமளவிற்கு உண்மையே என்றாலும், ஊடகவியலாளர்கள் வெளியே வந்து தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அந்த அநீதியை கண்டிக்காதது ஏன் என்ற வினா எழுகிறது.
அந்த அளவிற்கு இந்திய ஊடகவியலாளர்கள் மனிதாபிமானமற்றவர்களாகி விட்டனரா என்று ஏன் நாம் வினவ வேண்டியுள்ளது. காரணம், நேற்று அதிகாலை இங்கிலாந்தின் சனல் 4 தொலைக்காட்சி ஈழப் போரில் நடந்த அத்துமீறல்கள்கள், அந்த மக்கள் பட்ட அவலங்கள் ஆகியன தொடர்பான காணொளியை வெளியிட்டது.
50 நிமிடங்களுக்கும் அதிகமாக ஓடிய அந்தக் காணொளி - நன்கு சோதிக்கப்பட்டு, நேராக படம்பிடிக்கப்பட்டதுதான் என்பதை உறுதி செய்த பின்பு ஒளிபரப்பப்பட்டதாகும். அதனைக் கண்ட உலக நாடுகளின் அரச பிரதிநிதிகளும், மக்களும் பெரும் துயருக்கு ஆளானார்கள். அவர்களில் பலர் இந்த அநீதியை இழைத்தவர்களை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
இங்கிலாந்து, அமெரிக்க அரசு பிரதிநிதிகள் குரல் கொடுத்தனர். ஆனால் இந்தியாவி்ன் எந்த ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டின் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பரவலாக அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்தியா என்பது ஒரு நாடு, நாம் அனைவரும் இந்தியர்கள் என்று தொலைக்காட்சிகளில் பாட்டுப் பாடி எவ்வளவுதான் பரப்புரை செய்தாலும், இந்தியாவின் ஒரு இன இந்தியனின் துயரம் இதர இனத்தின் இந்தியர்களுக்கு ஒரு செய்தி கூட இல்லை என்பதுதான் வருத்தமானதாகும்.
இந்திய நாட்டு அரசுக்கு மனிதாபிமானம் என்பது ஒரு அரசு நெறி இல்லை என்பதை அது காஷ்மீரில், வடகிழக்கு மாநிலங்கள், தண்டகாரண்யம் ஆகிய இடங்கள் மட்டுமின்றி, தமிழினப் படுகொலைக்கு உதவியதில் நிரூபணமானது.
ஆனால் இந்தியர்களுக்கும் மனிதாபிமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா? இந்தியர்கள் என்று கருதுபவர் ஒவ்வொருவரும் சிந்திக்கட்டும்.
நன்றி - தமிழ் வெப்துனியா.கொம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக