எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 3 ஜூலை, 2013

தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்க வலியுறுத்தி புதிய தமிழகம் உண்ணாவிரதம்


பள்ளன், குடும்பன், காலாடி, மூப்பன், பன்னாடி, தேவேந்திரகுலத்தான் ஆகிய அனைவரையும் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் புதிய தமிழகம் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
இந்தப் போராட்டத்தை முடித்து வைத்த அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கே. கிருஷ்ணசாமி பேசியது:
தமிழகத்தில் பள்ளன், குடும்பன், காலாடி, மூப்பன், பன்னாடி, தேவேந்திரகுலத்தான் என உள்ள 6 சமுதாய மக்களையும் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும். தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கியதால் உயர் பதவிக்குச் செல்ல முடியவில்லை. எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தியாகி சுந்தரலிங்கனார், இமானுவேல் சேகரனார் பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பாகக் கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 6-ம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டம், ஒன்றியத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டம் ஜூலை மாதம் வரை நடைபெறுகிறது. அடுத்த கட்டப் போராட்டம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என்றார் கிருஷ்ணசாமி. இந்தப் போராட்டத்துக்குக் கட்சியின் மாவட்டச் செயலர் குணா தலைமை வகித்தார். துணைச் செயலர் ஜயராமன், தஞ்சாவூர் ஒன்றியச் செயலர் தியாகராஜன், சட்ட ஆலோசகர்கள் சுகுமாறன், சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, துணைச் செயலர் சசிகுமார் வரவேற்றார். பட்டுக்கோட்டை ஒன்றிய செயலர் குழந்தைசாமி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக