எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 31 ஜனவரி, 2015

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் திமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு : டாக்டர் க. கிருஷ்ணசாமி பேட்டி..

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில், திமுக வேட்பாளரை புதிய தமிழகம் கட்சி ஆதரிக்கும் என்றார் அக்கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.
திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களுள் ஒன்று. இத்தேர்தல்கள் நேர்மையாக நடைபெற்றால் தான் நாட்டின் ஜனநாயகம் வலுப்பெறும். ஆனால், தமிழகத்தில் அண்மைக்காலமாகக் கையாளப்படும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் நடைமுறை, ஜனநாயகத்தை தரம் தாழ்த்துவதாக உள்ளது.
இந்த மோசமான நடைமுறை ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலிலும் தொடரும் என்பது உறுதி. ஜனநாயக விதி மீறல்கள் இல்லாமல் இத்தேர்தல் நடைபெறும் என்பதில் நம்பிக்கையில்லை. இருப்பினும், தேர்தலைச் சந்திக்காத அரசியல் தெளிவான சிந்தனையாக இருக்க முடியாது. தேர்தல் என்ற ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கும் உண்டு என்ற அடிப்படையில், இத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, திமுகவுடன் கைக்கோர்த்து களமிறங்குகிறது.
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளரை பொது வேட்பாளராகக் கருதி ஆதரவளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் கேட்டுக் கொண்டதன் பேரில், ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை புதிய தமிழகம் கட்சி மேற்கொண்டுள்ளது.
இத்தொகுதியில் எங்கள் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இப்பகுதியில், சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் உள்ளனர். எங்கள் கட்சித் தொண்டர்கள் அனைவரும், திமுக வேட்பாளரின் வெற்றிக்கு முழு வீச்சில் பாடுபடுவர்.
இத்தொகுதி வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரம் வாக்காளர்கள் 2 முறை இடம் பெற்றுள்ளனர் என்ற தகவல் வேதனைக்குரியது. சரியான, தெளிவான வாக்காளர் பட்டியல் கூட வெளியிடப்படவில்லை என்பது, ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது என்றார் டாக்டர் கே. கிருஷ்ணசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக