எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 13 ஜூன், 2015

விஜயகாந்த்துடன், டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு!


சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினார்.

காவிரி, முல்லை பெரியாறு மற்றும் மீனவர் பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

அதன்படி இன்று கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தை, கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 1 மணி நேரம் நடந்தது.

இதன் பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''காவிரி, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் உள்ளிட்ட தமிழர்களின் பிரச்னை சம்பந்தமாக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறேன். அதன்படி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளேன்.

அதன்படி, இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினேன். அப்போது, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர்கள் பிரச்னை, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்தினோம். மேலும், வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் புதிய தமிழகம் கட்சியின் 6வது மாநில மாநாடு நடக்கவிருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறும் விஜயகாந்த்துக்கு அழைப்பு விடுத்தேன். அது குறித்து பின்னர் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழத்தமிழர் உள்ளிட்ட பிரச்னைகளில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டால், கட்சிகளுக்கு இடையே உள்ள இறுக்கங்கள் குறையும்.

தற்போது, பல தலைவர்களை முதல் முறை சந்தித்து இருக்கிறேன். தேவைப்பட்டால் மீண்டும் அனைவரையும் சந்தித்துப் பேசுவேன். அதேபோல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவும் நேரம் கேட்பேன். நேரம் ஒதுக்கப்பட்டால் அவரையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவேன்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக