எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 19 மார்ச், 2013

ஐ.நா முன்பு ஆர்ப்பாட்டம்! டாக்டர் கிருஷ்ணசாமி



சென்னையில் உள்ள ஐ.நா. துணை அலுவலகம் முன்பு வருகிற 20-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்து உள்ளார்.
கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அங்கு இன அழிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக தமிழ் மக்கள் பூர்வீகமாக குடியிருந்து வரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்து உள்ளது.
அதில் ராணுவமே விவசாயம் செய்து அந்த பொருட்களை யாழ்ப்பாணம் பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து, தமிழர்கள் செய்து வரும் சிறு வணிகத்தையும் அழித்து வருகிறது. அத்துடன் தமிழ் மீனவர்களுக்கு எவ்வித வசதியும் செய்து கொடுக்காமல் சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடிக்க அதிநவீன கருவிகளை கொடுத்து உள்ளது.
மேலும் ஈழத்தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினால் அவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்படுகிறார்கள். தொடர்ந்து அங்கு தமிழர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் இலங்கை அரசு மீது கொண்டு வரப்படும் தீர்மானம் வலுவானதாக இருக்க வேண்டும்.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. இலங்கையில் 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கும் தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அமைதி முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் வெடிக்கும் முன் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
மேலும் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. துணை அலுவலகம் (யுனிசெப்) முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் கட்சி பேதமின்றி நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். 

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக